சூலக்கல் மாரியம்மன் திருவிழாவில் மடிப்பிச்சை ஏந்தி, அடி அளந்து வழிபாடு
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, சூலக்கல் மாரியம்மன் கோவில் திருவிழாவில் பக்தர்கள் மனமுருகி வேண்டி, அடி அளந்தும், கம்பத்துக்கு புனித நீர் ஊற்றியும் வழிபாடு செய்கின்றனர்.
பொள்ளாச்சி, சூலக்கல் மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த, 11ம் தேதி திருத்தேர் முகூர்த்த கால் நிகழ்ச்சியுடன் துவங்கியது. கடந்த, 12ம் தேதி வேல் புறப்பாடு, பூச்சாட்டு விழா நடந்தது. 18ம் தேதி இரவு, கிராமசாந்தி, வாஸ்து சாந்தியும், 19ம் தேதி இரவு, கம்பம் நடும் விழா, பூவோடு எடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றன.
கடந்த, 20ம் தேதி கொடியேற்றமும், தினமும் காலை, 9:00 மணி மற்றும் இரவு, 8:00 மணிக்கு அம்மன் திருவீதி உலா; இரவு, பூவோடு எடுத்தல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.கோவில் திருவிழா, 18 கிராமங்களில் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. பக்தர்கள் ஈரத்துணியுடன் வேப்பிலை ஏந்தி, வீடு, வீடாக சென்று மடிப்பிச்சை பெற்றனர். அதன்பின், அம்மனை மனமுருகி நினைத்து தரையில் அடி அளந்து கும்பிட்டு வழிபாடு செய்தபடி கோவிலுக்கு வந்தனர். கோவிலை சுற்றி வளம் வந்த பின், கம்பத்துக்கு முன் மடிப்பிச்சையாக கொண்டு வந்த அரிசியை வழங்கி அம்மனை வழிபட்டனர். ‘மனக்குறையெல்லாம் போக்கி நோய் நொடியின்றி வாழ வேண்டும்; மும்மாரி மழை பெய்து, விவசாயம் செழிக்க வேண்டும்,’ என வழிபட்டனர். மேலும், கோவிலில் உள்ள கம்பத்துக்கு மஞ்சள் நீர் ஊற்றியும், பூவோடு எடுத்தும் பக்தர்கள் வழிபாடு செய்தனர். பக்தர்கள் நேர்த்திக்கடனை செலுத்தி, அலகு குத்தி ஊர்வலமாக வந்து அம்மனை வழிபட்டனர். இன்று திருக்கல்யாண உற்சவமும், நாளை தேரோட்டமும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை, புரவிபாளையம் ஜமீன் சண்முகசுந்தரி வெற்றிவேல் கோப்பண்ண மன்றாடியார், அறங்காவலர் குழு தலைவர் கொற்றவேலு, அறங்காவலர்கள் சுதாகர், பாலசுப்ரமணியம், பழனிசாமி, கோவில் செயல் அலுவலர் சீனிவாச சம்பத் ஆகியோர் செய்து வருகின்றனர்.