திருப்பதி, சபரிமலை போல் தமிழக கோயில்களில் தரிசனத்துக்கு முன்பதிவு நல்லதா?
திருப்பதி, சபரிமலையில் உள்ளது போல, தமிழக கோயில்களிலும் தரிசனம் செய்ய முன்பதிவு செய்ய வேண்டும் என்ற விதியை கொண்டு வர தமிழக அரசு விரும்புகிறது. இது குறித்து கோவை மக்களிடம் கேட்டோம்.
ஒரே வரிசை முறை வேண்டும்: ஒரே வரிசை வரலாம். மனக்கஷ்டம் வரும்போது, நினைத்த உடன் கோயிலுக்கு போய் வரலாம் என்றுதான் தோன்றும். அப்படியிருக்க முன்பதிவு செய்தால்தான் சாமி தரிசனம் என்ற விதியை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? அரசு செய்ய வேண்டியது முன்பதிவு கட்டாயமாக்குவது அல்ல; நீண்ட நேரம் காத்திருக்காமல் வசதிகளை மேம்படுத்துவதுதான். பணம் கொடுத்தால் தனி தரிசனம் என்ற நிலையை மாற்றி, சாமி அனைவருக்கும் பொதுவானவர் என்ற அடிப்படையில், ஒரே வரிசை முறையைக் கொண்டு வர வேண்டும். - தமிழ்செல்வி, பெரியநாயக்கன்பாளையம்
சாமானிய மக்களுக்கும் வேண்டும்: கோவில் தரிசனங்களுக்கு ஆன்லைனில் முன்பு பதிவு கொண்டு வருவதை மனதார வரவேற்கிறேன். மக்கள் கூட்டம் வருவதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி பலரும் பணம் சம்பாதித்து வருகிறார்கள். அனைத்து பெரிய கோவில்களிலும் இவர்களின் அட்ராசிட்டி அதிகமாக உள்ளது. விரைந்து தரிசனம் செய்ய வேண்டும் என்பதால் மக்களும் அவர்கள் கேட்கும் பணத்தை கொடுக்கிறார்கள். இதற்கு பயந்து பலர் நல்ல நாட்களில் கோவிலுக்கு செல்வதை தவிர்க்கிறார்கள். குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்தில் தரிசனம் என்கிற முறை கொண்டு வருவது நல்லதுதான். -லோகநாதன், ஆர்.எஸ்.புரம்
நேரடி தரிசனத்துக்கு வாய்ப்பு: முன்பதிவு முறையை அறிமுகப்படுத்தினால், பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியம் குறையும். நெரிசலை கட்டுப்படுத்தவும் உதவும். விரைவு தரிசனம் என்ற பெயரில் பணம் வசூலிப்பது மற்றும் அதனுடன் தொடர்புடைய முறைகேடுகளையும் தடுக்க முடியும். அதே நேரத்தில், முன்பதிவு செய்ய விரும்புபவர்களுக்கு அந்த வசதி வழங்கப்படுவதோடு, நேரடியாக கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கும் தரிசன வாய்ப்பு இருக்க வேண்டும். திடீரென கோவிலுக்கு வருபவர்களும் எளிதாக தரிசனம் செய்யும் வகையில் நடைமுறை அமைய வேண்டும். - தினேஷ், மலுமிச்சம்பட்டி
ஒழுங்குப்படுத்துதல் அவசியம்: எனக்கு தெரிந்த உறவினர் வட்டாரத்தில் பலர், கோவில் கோவிலாக முக்கிய தினங்களில் தரிசனத்திற்கு செல்வதுண்டு. ஆனால் ஒவ்வொரு முறையும், தங்குவதற்கு சாமி தரிசனத்திற்கு பெரும் சிரமப்படுவதாக கூறுவர். முன்பதிவு திட்டத்தை கொண்டுவந்து, இதை ஒழுங்குப்படுத்தினால், பக்தர்கள் பயனடைவர். கோவில் விவகாரத்தில் சில புதிய நடைமுறைகளை கொண்டு வருவது அவசியம். - மோகன்குமார், ஆர்.எஸ்.புரம்
கூட்ட நெரிசல் தவிர்க்கலாம்: முக்கிய தினங்களில் எவ்வளவு பேர் தரிசனத்திற்கு வருகின்றனர். அவர்களால் கோவில் நிர்வாகத்திற்கு எவ்வளவு பணம் கிடைக்கிறது என்பது, இதுவரை எந்த ஆட்சியிலும் வெளிப்படையாக பேசப்படாத ஒன்றாக இருந்தது. திருப்பதி செல்லும் போதெல்லாம், இங்குள்ள நடைமுறை, நம்மூர் கோவில்களில் ஏன் பின்பற்றுவதில்லை என தோன்றும். இதை அமல்படுத்தினால், தேவையில்லாத கூட்ட நெரிசலை தவிர்க்கலாம். - ராம்நந்து, செட்டிபாளையம்
மனநிறைவு கிடைக்கும்: தமிழக கோவில்களில் முன்பதிவு செய்து தரிசிக்கும் முறை அமல்படுத்தினால் அருமையாக இருக்கும். பக்தர்கள் நீண்ட நேரம் கூட்ட நெரிசலில் வரிசையில் காத்திருக்க தேவையில்லை. முன் பதிவு செய்தவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு வந்து அமைதியான முறையில் தரிசனம் செய்ய வசதியாக இருக்கும். லஞ்சம் கொடுத்து சுவாமி தரிசனம் செய்யும் கெட்ட பழக்கத்தை முற்றிலும் தடுக்க முடியும். இப்புதிய முறையை அமல்படுத்தி தரிசனம் செய்ய அனுமதிக்கும் போது மனநிறைவு கிடைக்கும். - ராஜசேகர், நஞ்சுண்டாபுரம் ரோடு
பக்தர்கள் பாதிக்கப்படக்கூடாது: திருப்பதி, சபரிமலை போன்ற கோயில்களில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த முன்பதிவு முறை உதவியாக இருக்கிறது. ஆனால் தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் இதை கட்டாயமாக்கினால், திடீரென தரிசனம் செய்ய வரும் பொதுமக்கள் சிரமப்பட வாய்ப்பு உள்ளது. பெரிய கோயில்களில் மட்டும் சிறப்பு நாட்களில் முன்பதிவு முறையை கொண்டு வந்தால் நல்லது. அதே நேரத்தில் சாதாரண பக்தர்களின் வசதியும் பாதிக்கப்படக்கூடாது. - செல்வக்குமார் வடவள்ளி