மாகறல் வைகுண்டவாசர் கோவிலில் ஆகஸ்டில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு
காஞ்சிபுரம்: மாகறல் கமலவல்லி தாயார் சமேத வைகுண்டவாச பெருமாள் கோவிலில் புனரமைப்பு பணிகள் முடித்து, ஆகஸ்ட் மாதத்தில் மஹா கும்பாபிஷேகம் நடத்த ஹிந்து சமய அறநிலையத் துறையினர் முடிவு செய்துள்ளனர். மாகறல் வைகுண்டவாச பெருமாள் கோவிலை புனரமைக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதை தொடர்ந்து, இக்கோவிலை முழுமையாகப் புதுப்பித்து, மஹா கும்பாபிஷேகம் நடத்த திட்ட மிடப்பட்டது. அதன்படி, மூலவர் பெருமாள் சன்னிதி, தாயார் சன்னிதி மற்றும் பரிவாரத் தெய்வங்களின் சன்னிதிகள் ஆகம விதிப்படி பழமை மாறாமல் சீரமைக்கப்பட உள்ளன. கோவிலின் மஹா மண்டபம் மற்றும் பிரகார சுவர்கள் பலப்படுத்தப்பட்டு, புதிய வர்ணங்கள் தீட்டப்படவுள்ளன. கோவிலைச் சுற்றியுள்ள மதில் சுவர்கள் சீரமைக்கப்பட்டு, பக்தர்கள் வலம் வர ஏதுவாக பிரகாரம் சமன்படுத்தப்பட உள்ளது.
இதுகுறித்து, ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கூறியதாவது: கடந்த ஆண்டு இறுதியில் தொடங்கப்பட்ட திருப்பணிகள், 25.50 லட்சம் ரூபாய் மதிப்பில் உபயதாரர் நிதி பங்களிப்புடன் நடைபெற்று வருகின்றன. திருப்பணிகள் முடிவடைந்ததும், ஆகஸ்ட் மாதத்தில் மஹா கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப் பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.