உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோம்பை திருமலை ராயப்பெருமாள் கோயிலில் பாலாலயம் பூஜை

கோம்பை திருமலை ராயப்பெருமாள் கோயிலில் பாலாலயம் பூஜை

 உத்தமபாளையம்; கோம்பை திருமலைராயப் பெருமாள் கோயிலில் பாலாலயம் பூஜை நடைபெற்றது. 11 ஆண்டுகளுக்கு பின் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது .

கோம்பை திருமலை ராயப் பெருமாள் கோயில் பிரசித்தி பெற்றது. ராமக்கல் மலையில், ரங்கநாதர் தெற்கில் தலைவைத்து, வடக்கு திசையில் கால் நீட்டி, கோம்பை நகரை பார்த்த வண்ணம் எழுந்தருளியுள்ளார். சுயம்புவாக எழுந்தருளிய ஸ்தலமாகும். கோயில்களில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்பது ஆகம விதி. அதன்படி இந்த கோயிலில் கடந்த 2015 ல் மகா கும்பாபிஷேகம் நடந்தது. 11 ஆண்டுகளுக்கு பின் இந்தாண்டு திருப்பணி செய்து கும்பாபிஷேகத்தை நடத்த பரம்பரை அறங்காவலரும், கோம்பை ஜமீன்தாருமான சீனிவாசராயர் மற்றும் அனைத்து சமுதாய பொதுமக்கள், கிராமங்களை சேர்ந்த சமுதாய நிர்வாகிகள், ஹிந்து சமய அறநிலைய துறை முடிவு செய்தது. அதன் பேரில் நேற்று அதிகாலை அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. ஹோமங்கள், சிறப்பு அபிஷேகம் நடந்தது. ஸ்ரீவில்லிப்புத்தூர் பட்டாச்சாரியார் வெங்கடேஷ், ஜம்புலிப்புத்தூர் முரளி சுவாமிகள் பாலாலயத்தை நடத்தினார்கள். நிகழ்ச்சியில் பரம்பரை அறங்காவலர் சீனிவாசராயர், செயல் அலுவலர் யுவராஜா, பேரூராட்சி தலைவர் மோகன் உள்ளிட்ட அனைத்து சமுதாய நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். திருப்பணியை விரைந்து முடித்து கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்று தெரிவித்தனர். நிகழ்ச்சியில் திரளாக பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !