கோபுர தரிசனம் கோடி புண்ணியம்; 406 கும்பாபிஷேகம் கண்ட ஓய்வு பெற்ற ராணுவ வீரர்
சிக்கல்: ‘கோபுர தரிசனம் கோடி புண்ணியம்’ என்ற சொல்லுக்கு ஏற்ப எங்கு கும்பாபிஷேகம் நடந்தாலும் அதனை முன்கூட்டியே தெரிந்து விழாவில் பங்கேற்பதை தனது வாழ்நாள் கடமையாக கொண்டுள்ளார் ஓய்வு ராணுவ வீரர்.
சிக்கல் அருகே மறவாய்குடி கிராமத்தை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் பழனிவேலு 84. இவர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கோயில்களில் நடக்கும் கும்பாபிஷேக நிகழ்வுகளில் தவறாமல் பங்கேற்று தனது தரிசன எண்ணிக்கை கணக்கை உயர்த்தி வருகிறார். 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம். இந்நிலையில் மாதம் முழுவதும் எங்கு கும்பாபிஷேகம் நடந்தாலும் அது பற்றிய விபரங்களை கேட்டு தெரிந்து கொண்டு அவ்விடத்திற்கு சென்று சுவாமி தரிசனம் செய்வதை வாழ்நாள் கடமையாக கொண்டுள்ளார் பழனிவேலு. அவர் கூறியதாவது: நான் ராணுவத்தில் வீரராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளேன். 1995ல் இருந்து கும்பாபிஷேகம் நடக்கவுள்ள கோயில் மற்றும் அதில் கலந்து கொண்ட நிகழ்வுகள் பற்றி டைரியில் எழுதி வைத்துக் கொள்கிறேன். தற்போது வரை 406 கோயில் கும்பாபிஷேகங்களில் கலந்து கொண்டுள்ளேன். எனது முயற்சிக்கு பல்வேறு கோயில் குருக்கள் மற்றும் வெளியூர் நண்பர்கள் ஆதரவு தருகின்றனர். மூன்று நாள் தங்கியிருந்தும் கும்பாபிஷேக தரிசனத்திற்காக வெளியூர் வந்து விடுகிறேன். எனது வாழ்நாள் முழுவதும் கும்பாபிஷேகத்தை காண வேண்டும் என்ற எண்ணத்தில் அதன் எண்ணிக்கையை அதிகப்படுத்தி வருகிறேன். இன்றைய தலைமுறைகள் கோயில்களின் பழமை, பாரம்பரியம் அவற்றின் மகத்துவம் பற்றி தவறாமல் அறிந்து கொள்ளவும், இறை வழிபாட்டின் நோக்கங்களை பற்றி தெரிந்து கொள்வதும் அவசிய தேவை என்றார்.