சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு அபயஹஸ்தம்; பக்தர் காணிக்கை
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு தங்கத்திலான, அபயஹஸ்தம் பக்தர் காணிக்கையாக வழங்கப்பட்டது.
சிதம்பரம் நடராஜர் கோயில் உற்சவ மூர்த்தியான சோமாஸ்கந்தருக்குத் தங்க அபயஹஸ்தம் அணிவிக்கப்பட்டது. சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஸ்ரீ நடராஜ மூர்த்தியின் ப்ரிதிநிதியாக விளங்கும் உற்சவ மூர்த்தியான ஸ்ரீ சிவானந்தநாயகி ஸமேத ஸ்ரீ சோமாஸ்கந்தருக்கு ஆனித் திருமஞ்சன தரிசன மஹோத்ஸவ தினமான 3-ஆம் நாளான நேற்று தங்கத்திலான அபயஹஸ்தம் காணிக்கையாக வழங்கப்பட்டது. பக்தர் ஒருவரால், அவரது கட்டளை தீட்சிதரான பாஸ்கர் தீட்சிதர் மூலம், கோயில் பொது தீட்சிதர்கள் கமிட்டி செயலாளர் ஜெயசூர்யா தீட்சிதரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதில், பவழம், புஷ்பராகம், பச்சைக் கற்கள் பதிக்கப்பட்ட, தங்க அபயஹஸ்தம் கவசம், சோமாஸ்கந்தருக்கு அணிவிக்கப்பட்டது. 30 லட்சம் மதிப்பிலான அபயஹஸ்தம் மொத்த எடை சுமார் 195 கிராம் ஆகும்.