பாகூர் மூலநாதர் கோவில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவக்கம்
பாகூர்: பாகூர் வேதாம்பிகை சமேத மூலநாதர் சுவாமி கோவில் ஆனி மாத 10 நாள் பிரம்மோற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
இதனையொட்டி, நேற்று மாலை கணபதி பூஜை, வாஸ்து சாந்தி, பிடாரி அம்மன் குதிரை வாகன வீதியுலா நடந்தது. இன்று காலை பால விநாயகர், மூலநாதர், வேதாம்பிகை அம்மன் உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து கொடி மரத்திற்கு சிறப்பு பூஜை செய்து கொடி ஏற்றப்பட்டது. செந்தில்குமார் எம்.எல்.ஏ., உட்பட திரளானோர் பங்கேற்றனர். விழாவில், தினமும் இரவு சாமி வீதியுலா நடக்கிறது. வரும் 26ம் தேதி திருக்கல்யாண உற்சவம், 28ம் தேதி தேரோட்டம், 29ம் தேதி முருகன் வள்ளி தெய்வானை தெப்ப உற்சவம், 30ம் தேதி சண்டிகேஸ்வரர் மற்றும் ரிஷப வாகனத்தில் 63 நாயன்மார்கள் உற்சவம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி சிவக்குமார், சிவாச்சார்யார்கள் சங்கர நாராயணன், பாபு மற்றும் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.