குலுமா விளக்காளி அம்மன் கோயில்களில் கும்பாபிஷேகம்
கீழக்கரை: கீழக்கரை அருகே காஞ்சிரங்குடி ஊராட்சி லட்சுமிபுரத்தில் உள்ள குலுமா விளக்காளி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது. கடந்த ஜூன் 24 அன்று முதல் கால யாகசாலை பூஜையுடன் விழா துவங்கியது. நவசக்தி ஹோமம், எந்திர ஸ்தாபனம், அஷ்டபந்தன மருந்து சாத்துதல் மற்றும் பூர்ணாஹுதி உள்ளிட்டவைகள் நடந்தது. நேற்று காலை 8:00 மணிக்கு யாத்ரா தானம், கடம் புறப்பாட்டிற்கு பிறகு, கோயில் விமான கலசத்தில் சிவாச்சாரியார் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தார். மூலவருக்கு 16 வகையான சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. பகலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை குலுமாவிளக்காளியம்மன் கோயில் விழா கமிட்டியாளர்கள் செய்திருந்தனர்.
* திருப்புல்லாணி ஒன்றியத்துக்குட்பட்ட மேதலோடை அருகே பன்னிவெட்டி வலசையில் கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று முன்தினம் முதல் கால யாகசாலை பூஜையுடன் விழா துவங்கியது. காலை 10:15 மணிக்கு மூலவர்கள் கற்பக விநாயகர், பாலமுருகன் கோயில் கோபுர விமான கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். பின் மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபராதனைகள் தொடர்ந்து நடந்தது. சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை பன்னி வெட்டி வலசை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.
* மண்டபம் ஒன்றியத்திற்குட்பட்ட இருமேனி அருகே அலைகாத்தவலசையில் நேற்று காலை 11:30 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது.
அழகு கற்பக விநாயகர், நவக்கிரகங்கள், அழகு முத்து மாரியம்மன், காந்தாரியம்மன், கருப்பண்ணசாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் கோபுர விமான கலசத்தில் சிவாச்சாரியார் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தார். உத்தரகோசமங்கை நாகநாத குருக்கள் பூஜைகளை செய்தார். மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை அலைகாத்த வலசை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.