காரைக்கால் மாங்கனி திருவிழா திருமண அழைப்பிதழ் வெளியீடு
காரைக்கால்: காரைக்காலில் மாங்கனித்திருவிழாவை முன்னிட்டு புனிதவதி, பரமதத்தர் திருமண விழாவிற்கு கோவில் நிர்வாகம் சிறப்பு அழைப்பிதழை வெளியிட்டுள்ளது.
காரைக்கால் அம்மையார் அறுபத்து மூன்று நாயன்மார்களுள் சிறப்பான இடத்தைப்பெற்றவர். கடந்த 5ம் நுாற்றாண்டில் அவதரித்தவர். அவரின் திருமுறைகளுள் திருப்பதிகங்கள் மூவர் தேவாரத்திற்கு முன் மாதிரியானவை. தாய் தந்தையற்ற இறைவனால் அம்மையே என்று அன்புடன் அழைக்கப்பெற்ற பெருமையுடையவர். திருக்கோவில்களில் அமர்ந்த திருக்கோலத்தில் வீற்றிருப்பவரும் அம்மையார் ஒருவரே.
அம்மையாரின் மாங்கனித் திருவிழா வரும் 27ம் தேதி மாப்பிளை அழைப்புடன் துவங்குகிறது. 28ம் தேதி திருக்கல்யாண உற்சவம், 29ம் தேதி அதிகாலை மகா அபிேஷகம், தீபாராதனை, தொடர்ந்து மாங்கனி இறைத்தல் மற்றும் அமுதுபடையல் நிகழ்ச்சிகள் நடக்கிறது. வரும் 28ம் தேதி காலை 9:00 மணிக்கு மேல் 10:30 மணிக்குள் காரைக்கால் அம்மையார் மணிமண்டபத்தில் புனிதவதி மற்றும் பரமதத்தர் ஆகியோருக்கு திருமணம் நிகழ்ச்சி நடைபெறுவதாக கோவில் நிர்வாகம் சார்பில், மஞ்சல் பத்திரிக்கை அடிக்கப்பட்டு அனைவருக்கும் திருமணத்திற்கு வரும்படி அழைப்பிதழ் வெளியிட்டுள்ளது.