கங்கையம்மன் கோவிலில் தெப்ப திருவிழா
திருப்போரூர்: தண்டலம் கிராமத்தில் கங்கையம்மன் கோவிலில் தெப்ப திருவிழா நேற்று முன்தினம் இரவு கோலாகலமாக நடந்தது.
திருப்போரூர் அடுத்த தண்டலம் கிராமத்தில் கங்கையம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆனி மாதத்தில் ஆண்டுதோறும் தெப்ப திருவிழா நடப்பது வழக்கம்.
இதை முன்னிட்டு, கடந்த 26ம் தேதி பால் குட விழாவும், 27ம் தேதி அம்மன் வர்ணிப்பு, வீதி உலாவும், 28ம் தேதி கூழ்வார்த்தல் விழாவும் விமரிசையாக நடந்தன. விழாவின் முக்கிய நிகழ்வான தெப்ப திருவிழா நேற்று முன்தினம் இரவு கோலாகலமாக நடந்தது.
இதையொட்டி காலை 7:00 மணிக்கு, விக்னேஷ்வர பூஜை, 9:00 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது. மாலை 5:00 மணிக்கு பெரிய பாளையத்தம்மன் கோவிலிருந்து பக்தர்கள் சீர்வரிசை எடுத்து வந்து சிறப்பித்தனர்.
தொடர்ந்து, இரவு 8:00 மணிக்கு, மேளதாளங்கள் ஒலிக்க, கோவில் அருகே உள்ள குளத்தில், அலங்கரிக்கப்பட்ட தெப்பலில் அம்மன் எழுந்தருளி, குளத்தை மூன்று முறை வலம் வந்தார். விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை தரிசித்தனர்.