திருவண்ணாமலை ஆதி அருணாசலேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக யாக பூஜை
திருவண்ணாமலை; கிரிவலப்பாதை அடி அண்ணாமலை பகுதியில் உள்ள ஆதி அருணாசலேஸ்வரர் கோவிலில், நாளை நடைபெற உள்ள மகா கும்பாபிஷேக விழாவையொட்டி, கோவில் அருகில் அமைக்கப்பட்ட பிரமாண்ட யாகசாலையில், இன்று நான்காம் கால யாக பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.
திருவண்ணாமலை அருணாசலேசுவரர் திருக்கோயிலுடன் இணைந்த அருள்தரும் உண்ணாமுலை அம்மன் உடனாகிய ஆதி அருணாசலேசுவரர் திருக்கோயில் அடிஅண்ணாமலை ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன ஸ்வர்ணபந்தன மஹா கும்பாபிஷேகம் நாளை நடைபெற உள்ளது. கடந்த 26ம் தேதி விக்கனஸ்வர பூஜையுடன் விழா துவங்கியது. தொடர்ந்து 29ம் தேதி யாகசாலை பிரவேசம், யாக ஆரம்பம், முதல்கால யாக பூஜை துவங்கியது. இன்று நான்காம் கால யாக பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். நாளை விடியற்காலை 5.00 மணிக்கு மேல் 6.00 மணிக்குள் பணிவாரமூர்த்திகளுக்கு மஹாகும்பாபிஷேகம். மற்ற பூர்ணாஹுதி, யாத்ராதானாம் நடைபெறுகிறது. தொடர்ந்து காலை 10.00 மணி முதல் 11.00 மணிக்குள் ராஜகோபுரம் மற்றும் சகல் விமானங்களுக்கும் காலத்தில் மஹாகும்பாபிஷேகம், சுவாமி-அம்பாள் (மூலவர்) மஹாகும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.