வெள்ளி ரிஷப வாகனத்தில் திருவண்ணாமலை ஆதி அண்ணாமலையார் வீதி உலா
திருவண்ணாமலை; கிரிவலப்பாதை அடி அண்ணாமலை பகுதியில் ஆதி அருணாசலேஸ்வரர் கோவிலில் முடிந்த கும்பாபிஷேக விழாவையொட்டி நேற்று சிறப்பு அலங்காரத்தில் வெள்ளி ரிஷப வாகனத்தில் ஆதி அண்ணாமலையார் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில், அறநிலையத்துறைக்கு சொந்தமான ஆதி அருணாசலேஸ்வரர் கோவிலின் கும்பாபிஷேகம் கடந்த, 2012ல் நடந்தது. இந்நிலையில் கடந்த ஓராண்டாக, 1.25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கோவிலில் புனரமைப்பு பணி நடந்து வந்தது. இதையடுத்து நேற்று கோவிலில் மஹா கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி கடந்த மாதம், 26ல் விக்னேஷ்வர பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. நேற்று காலை, 6ம் கால யாகசாலை பூஜை நடத்தப்பட்டு, யாகசாலையில் வைத்த புனித கலச நீரால், பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு, கோவில் கோபுர விமான கலசங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தப்பட்டது. பின் மூலவர் அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மன் சன்னதி விமானங்களுக்கு கலச புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் நடந்தது. இதில், பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ என பக்தி கோஷமிட்டு வழிபட்டனர். விழாவில் பக்தர்களுக்கு டிரோன் மூலம் புனித நீர் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து, மூலவருக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடத்தப்பட்டது. இரவு, சுவாமி திருக்கல்யாயம் மற்றும் வெள்ளி ரிஷப வாகனத்தில் ஆதி அண்ணாமலையார், அன்ன வாகனத்தில் ஆதிபராசக்தி அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.