நாகமுத்து மாரியம்மன் கோவில் செடல் விழா; பக்தர்கள் நேர்த்திக்கடன்
அரியாங்குப்பம்: நயினார்மண்டபம் நாகமுத்து மாரியம்மன் கோவிலில் நேற்று நடந்த செடல் விழாவில், பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
கடலுார் சாலை நயினார்மண்டபம் நாகமுத்து மாரியம்மன் கோவில் செடல் விழாவையொட்டி, கடந்த 9ம் தேதி கொடியேற்றத்துடன் நிகழ்ச்சி துவங்கியது. தொடர்ந்து, தினந்தோறும் நாகமுத்து மாரியம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்து வந்தது. கடந்த 13ம் தேதி 108 பால்குட அபிேஷகம் மற்றும் 15ம் தேதி, 108 முளைப்பாரி ஊர்வலம் எடுத்து சென்று மரப்பாலம் குளத்தில் கரைக்கும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை பூங்கரகம் ஜோடித்து தங்க ஊசி பேழை ஊர்வலமாக எடுத்து வந்து அம்மனுக்கு தங்க ஊசி அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. பொதுமக்கள் அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். மாலையில் நடந்த செடல் விழாவில், ஏராளமான பக்தர்கள் அலகு குத்தி பஸ், லாரி, வேன், கார், கிரேன் உள்ளிட்ட வானங்களை இழுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர். பூஜை மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு நாகமுத்து மாரியம்மனுக்கு தீபாராதனை நடந்தது. நிகழ்ச்சியில், ஏராளமானோர் அம்மனை தரிசனம் செய்தனர். செடல் திருவிழாவையொட்டி, மாலை 4:00 மணி முதல் புதுச்சேரியில் இருந்து கடலுார் மார்க்கமாக சென்ற வாகனங்களை இந்திரா சதுக்கம், வில்லியனுார் வழியாகவும், கடலுாரில் இருந்து புதுச்சேரிக்கு வந்த வாகனங்களை, தவளக்குப்பம் சந்திப்பில் நிறுத்தி, அபிேஷகப்பாக்கம், வில்லியனுார் வழியாக போலீசார் திருப்பி விட்டனர்.