உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆதிகோரக்கநாதர் கோயிலில் சுபாஷினி பூஜை, சப்த கன்னியர்களாக மாறிய சிறுமிகள்

ஆதிகோரக்கநாதர் கோயிலில் சுபாஷினி பூஜை, சப்த கன்னியர்களாக மாறிய சிறுமிகள்

திருப்புவனம்; திருப்புவனம் ஆதிகோரக்கநாதர் கோயிலில் சப்த கன்னியர்களாக மாறிய சிறுமியர்களை வைத்து நடந்த சுபாஷினி பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சிறுமியர்களிடம் ஆசிர்வாதம் பெற்று சென்றனர்.


நவராத்திரி திருவிழா போன்று ஆடி மாதத்தில் சுபாஷினி பூஜை மிகவும் பிரசித்தி பெற்றது. வராஹி அம்மன் உள்ள ஆலயங்களில் ஆஷாட நவராத்திரி பஞ்சமி விழா என்ற பெயரில் சுபாஷினிபூஜை நடத்தப்படுகிறது. 11 நாட்கள் நடத்தப்படும் இந்த விழாவில் 5ம் நாளான பஞ்சமி திதி வழிபாடு மிகுந்த முக்கியத்துவம் பெற்றது. திருப்புவனம் ஆதிகோரக்கநாதர் கோயிலில் நேற்று சுபாஷினி பூஜை நடத்தப்பட்டது. சப்த கன்னியர்களாக தேர்வு செய்யப்பட்ட ஏழு சிறுமியர்களை அமர வைத்து சுபாஷினி பூஜை நடந்தது. பூஜையின் நிறைவாக சிறுமியர்களுக்கு புத்தாடைகள், கண்ணாடி வளையல், சீப்பு, மருதாணி, மஞ்சள், குங்குமம் உள்ளிட்டவைகள் உள்ளிட்டவைகள் வழங்கி பெண்கள் ஆசி பெற்றனர்.


கார்த்திகேயன் கூறுகையில், புரட்டாசி மாதத்தில் அம்மனுக்கு நவராத்திரி திருவிழா கொண்டாடுவது போல, ஆடி மாதத்தில் வராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழா கொண்டாடப்படும், சப்த கன்னியர்களை வழிபட்டால் முன்னோர்களின் ஆசி தலைமுறை தலைமுறையாக குடும்பத்திற்கு கிடைக்கும், என்றார். 


லட்சுமண பிரபு கூறுகையில், தஞ்சை பெரிய கோயிலில் வராஹி அம்மனுக்கு வருடம்தோறும் 11 நாட்கள் ஆஷாட நவராத்திரி விழா கொண்டாடப்படும், அதே போல திருப்புவனம் ஆதிகோரக்கநாதர் கோயிலிலும் ஆஷாட நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. வராஹி அம்மன் எதிரிகளை வெல்லும் பேராற்றல் கொண்டவர், ராஜ ராஜ சோழன் போருக்கு செல்லும் முன் வராஹி அம்மனை வழிபடும் வழக்கம் கொண்டவர், வராஹி அம்மன் கையில் கலப்பையுடன் இருப்பதால் விவசாயத்தை செழிக்க வைப்பார் என்ற நம்பிக்கையும் உள்ளது, என்றார். திருப்புவனத்தில் ஆதிகோரக்க நாதர் கோயிலில் நடந்த சுபாஷினி பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !