1 லட்சம் பேர் திருவாசகம் எழுதும் உலக சாதனை நிகழ்வு
புதுச்சேரி: திருவண்ணாமலையில் நாளை திருவாசக தெய்வீக மாநாடு துவங்கி இரு நாட்கள் நடைபெற உள்ளது.
இதுகுறித்து, மாநாட்டின் தலைவர் சிவக்குமார், புதுச்சேரி தமிழ்ச் சங்கத்தின் செயலாளர் சீனு மோகன்தாஸ் அளித்த பேட்டி:
சைவ சமயத்தில் பன்னிரு திருமுறைகளில் ஒன்றான திருவாசகத்தின் பெருமையை பறைசாற்ற, திருவண்ணாமலை தண்டராம்பட்டு சாலை, மாதவி பன்னீர்செல்வம் மஹாலில் நாளை (25ம் தேதி) மற்றும் 26ம் தேதி ஆகிய இரு நாட்கள் திருவாசக தெய்வீக மாநாட்டிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நம் பிறவியின் பயன் திருவாசகம் எழுதுவதே என்ற உயரிய நோக்கத்துடன் திருவண்ணாமலையில் இந்த திருவாசக தெய்வீக மா நாடு நடக்க உள்ளது.
உலகம் முழுவதும் 16 நாடுகளை சேர்ந்த 1 லட்சம் பேர் 7 மொழிகளில் ஒரே நேரத்தில் திருவாசகம் எழுதுகின்றனர். இதில் அனைத்து மாநிலங்களும் பங்கேற்கின்றன. புதுச்சேரி மக்களும் பங்கேற்கலாம். திருவண்ணாமலை திருப்பெருந்துறை அடியார்கள் குழு மற்றும் தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் இணைந்து இம்மாநாட்டை நடத்துகின்றன.
மாணிக்கவாசக பெருமான் அருளிய திருவாசகத்தை அனைவரும் எழுதி அனைத்து உயிர்களிடம் அன்பு பாராட்ட வேண்டும். இது நமக்கு உத்வேகமாக இருக்கும். இந்த உலக சாதனை யுனிவர்சல் வோல்டு ரெக்கார்ட்டில் பதிவு செய்யப்பட உள்ளது’ என்றனர்.
கம்பன் அறக்கட்டளை நிறுவனர் ஞானஜோதி சரவணன், கோவை காமாட்சி ஆதீனம் தெய்வீக பேரவை அமைப்பாளர் சத்தியந்திரன் உடனிருந்தனர்.