பூரி ஜெகன்னாதர், கோயிலுக்கு திரும்பும் பஹுதா யாத்திரை துவங்கியது; லட்சக்கணக்கானோர் தரிசனம்
ஒடிசா; ஒடிசாவில் வருடாந்திர பூரி ஜெகன்னாதர் ரத யாத்திரையில் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் பூரியில் பஹுதா யாத்திரை தொடங்கியது; லட்சக்கணக்கானோர் திரண்டு ஊர்வலத்தை தரிசித்தனர்.
ஒடிசாவில் உலகப் புகழ் பெற்ற புரி ஜெகந்நாதா் கோயில் ரத யாத்திரை ஜூலை 16ம் தேதி கோலாகலமாகத் தொடங்கியது. இந்த விழாவில், ஜெகந்நாதா், அவரது சகோதரா் பலபத்திரா், சகோதரி சுபத்திரை ஆகிய மூன்று கடவுள்களின் அலங்கரிக்கப்பட்ட பிரம்மாண்ட ரதங்கள், பிரதான கோயிலில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள அவா்களின் பிறப்பிடமாக கருதப்படும் குண்டிச்சா கோயில் வந்து சேர்ந்தது. குண்டிச்சா கோயிலில் ஒரு வாரம் தங்கியிருந்த பிறகு, பகவான் ஜெகன்னாதர், பகவான் பலபத்ரா மற்றும் தேவி சுபத்ரா ஆகியோர் 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஜெகன்னாதர் கோயிலுக்குத் திரும்பும் பயணத்தை குறிக்கும் பஹுதா யாத்திரை இன்று துவங்கியது. விழாவில் பங்கேற்க லட்சக்கணக்கான பக்தர்கள் பூரியில் திரண்டிருக்க, பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் பகவான் ஜெகன்னாதர் மற்றும் அவரது உடன் பிறந்த தெய்வங்களின் பஹுதா யாத்திரை நடைபெற்று வருகிறது.