உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அழகர் மலையில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் திறக்கும் கதவுகள்; 18 ம்படி கருப்பசாமியை இன்று தரிசிக்கலாம்!

அழகர் மலையில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் திறக்கும் கதவுகள்; 18 ம்படி கருப்பசாமியை இன்று தரிசிக்கலாம்!

அழகர் மலையைக் காக்க பெருமாளால் நியமிக்கப்பட்டவர் கருப்பண்ண சாமி. இவருக்கு உருவம் கிடையாது, சந்தனம் பூசப்பட்ட கோபுரக் கதவே தெய்வமாக வணங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆடிப் பௌர்ணமி அன்று மாலை கருப்பசாமி சன்னதி கதவு திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள், தரிசனம் நடக்கும். அதன்படி இன்று மாலை 6.10 மணிக்கு மேல் 18 ம்படி கருப்பண்ண சாமி கோவில் கதவுகள் திறக்கப்பட உள்ளது.


மக்களுக்கும் சகல ஜீவராசிகளுக்கும் எல்லா ஊர்களுக்கும் காவல் தெய்வமாகத் திகழ்பவர் கருப்பசாமி. அவரின் தோற்றம் பற்றிக் கூறுவது இதுவரை கேள்விப்பட்டிராத தகவலாக இருக்கக்கூடும்!  


மன்னன் ஒருவன் அழகர் சிலையைக் கடத்த 18 மந்திரவாதிகளை அழைத்து, கொண்டு வரும்படி கூறினார். அழகர்கோயிலுக்கு வந்த அவர்கள் அரூவமாக (உருவமற்றவர்களாக) மாறி கருவறைக்குள் சென்றனர். பல நாட்கள் அரூவமாக அங்கு தங்கி இருந்து மந்திரங்களை உச்சரித்த அவர்கள் ஒருநாள் இரவு அழகரை எடுத்துச் செல்ல முயன்றனர். அப்போது கோயில் பட்டர்கள் கனவில் தோன்றிய பெருமாள், தன்னை உருவமற்ற சிலர் ஆகர்ஷனம் செய்ய முயல்வதை கூறினார். உருமாறிய அவர்களை கண்டுபிடிக்க மாற்று சக்தி மந்திரம் ஜெபித்து பட்டர்கள் கண்டுபிடித்தனர். தாங்கள் தவறை உணர்ந்த மந்திரவாதிகள் 18 பேரும் ராஜகோபுரம் படிகளில் அமர்ந்து, கோயிலில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க காவல் தெய்வமாக இருக்கிறோம் என்றனர். மேலும் மூலவர் பெருமாளுக்கு அணிவிக்கும் மாலை அலங்காரம் மற்றும் ராக்கால பூஜையின் போது சுவாமிக்கு நிவேத்தியம் செய்யும் பிரசாதம் ஆகியவற்றை தங்களுக்கு வழங்க வேண்டும் என கேட்டனர். சுந்தரராஜ பெருமாளும் அவர்களுக்கு காட்சி கொடுத்து அதன்படி நடக்கும் என அருளினார். முன்பு கோயில் கோபுரத்தில் எப்போதும் இருள் சூழ்ந்து கருப்பாக காணப்படும். அதனால் 18 படிகளில் உருவமற்ற நிலையில் அமர்ந்திருக்கும் அவர்கள் யாருடைய கண்ணுக்கும் புலப்பட மாட்டார்கள். காவல் தெய்வம் 18ம் படி கருப்பு என அழைக்கப்பட்ட அவர்கள் மருவி கருப்பசாமி என அழைக்கப்படுகின்றனர். அன்று முதல் பெருமாளுக்கு அணிவிக்கும் மாலை, இரவு பூஜை செய்யும் பிரசாதம் ஆகியவற்றை காவல் தெய்வம் கருப்புக்கே வழங்கப்படும். வேறு யாருக்கும் வழங்குவது இல்லை.


வால்மீகி, தர்பையைக் கிள்ளிப்போட்டு அதற்கு உயிர் கொடுக்க, அதுவே கருப்பண்ண சாமியானது என்பது, ராமாயணத் தகவல், தர்ப்பையில் பிறந்த கருப்பசாமி குறித்த பாடல் வரி, இதற்குச் சான்று பகரும். ஸ்ரீவீரபத்திரருக்கும் சண்டிக்கும் பிறந்த குழந்தை கருப்பசாமி என்றும் சொல்வார்கள். கருப்பன், கருப்பசாமி எனும் பெயர் கொண்ட மனிதர்களின் தலை வெட்டப்பட்ட புதைக்கப்பட்ட இடத்தில். கருப்பசாமி கோயில் ஏற்பட்டது என்றொரு ஆய்வுத் தகவலும் உண்டு. நின்ற கோலம், அமர்ந்த கோலம், குதிரையின் மீதேறி புறப்படும் கோலம்.... இப்படி பல்வேறு நிலைகளில் பல கோயில்களில் காட்சி தருகிறார் கருப்பசாமி. கருப்பண்ண சாமி தலத்தில் பொய் சொன்னால் தப்ப முடியாது. நியாயம் கிடைக்கும் என்பது மக்களின் நம்பிக்கை. இன்று சத்தியத்திற்கு கட்டுப்பட்ட கருப்பனை வழிபடுவோம் சங்கடம் நீங்க பெறுவோம்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !