15ம் நுாற்றாண்டில் ஆயுத பரிணாமத்தை விளக்கும் 4 அரிய நடுகற்கள் கண்டெடுப்பு
தேனி; சின்னமனுார் அருகே வேப்பம்பட்டியில் கி.பி., 15ம் நுாற்றாண்டில் ஆயுத பரிணாமத்தை விளக்கும் 4 அரிய நடுகற்களை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
கடமலைக்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியரும், தொல்லியல் ஆய்வாளருமான செல்வம் கூறியதாவது: வேப்பம்பட்டி அருகே சீப்பாலக்கோட்டை ரோட்டில் 500 மீ., இடைவெளியில் இரு இடங்களில் வரலாற்றுச் சின்னங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. ஸ்ரீரெங்கன் கண்மாய்க்கரையில் 16-ம் நூற்றாண்டை சேர்ந்த 3 அடி உயரம் கொண்ட முதன்மைப் படைத்தலைவன் சிற்பம். இதில் வீரன் வலது கையில் நீண்ட வாள், இடது தோளில் தொங்கும் வில்லை இடது கையாலும் ஒருசேரப் பற்றியுள்ளது போல் உள்ளது. தலையலங்காரம் இடதுபுறமாகச் சரிந்த பக்கக் கொண்டை உள்ளது. வில், வாள் இரு படைகளையும் ஒருசேர ஏந்தியிருப்பதால் இவ்வீரன் இப்பகுதி கோட்டைக் காவல் படைத்தலைவனாக இருந்திருக்கலாம்.இரண்டாவதாக கி.பி.16–17 நூற்றாண்டை சேர்ந்த வாள்வீரன் நடுகல் , நடராஜ் என்பவர் வீட்டின் அருகில் 6 அடி ஆழத்தில் கண்டெடுக்கப்பட்டது. இச்சிற்பம் 2 அடி உயரத்தில் வலது கையில் ஓங்கிய வாளுடனும், இடது தோளில் தொங்கும் வில்லுடனும் உள்ளது.
ஆயுத பரிணாமத்தின் சான்று : மூன்றாவதாக கி.பி. 17–18 நூற்றாண்டை சேர்ந்த ‘திணிப்புத் துப்பாக்கி’ வீரன் நடுகல். வீரன் இடது கையில் நீண்ட திணிப்புத் துப்பாக்கியை தலைகீழாகத் தரையில் ஊன்றியபடி வலது கையில் உடைவாள் உள்ளது. தமிழகத் தொல்லியலில் துப்பாக்கி ஏந்திய வீரர்களின் நடுகற்கள் அரிது. ஆயுதப் பரிணாமத்தின் முதன்மை சான்றாக உள்ளது. இவ்விரு கற்களையும் ‘கோட்டை கருப்பன்’,‘கொத்தால முத்து’ ஆகிய சிறுதெய்வப் பெயர்களில் வழிபாட்டில் வைத்துள்ளனர்.
வரலாற்று போரை சித்தரிக்கும் சிற்பம்: நான்காவதாக கி.பி.,16–17-ஆம் நூற்றாண்டை சேர்ந்த இரண்டரை அடி நீள சதி மரபு நடுகல் உள்ளது. இது வரலாற்றுப் போரைச் சித்தரிக்கிறது. மையத்தில் வாள், வில் ஏந்திய வீரனும், அவனது இருபுறமும் எதிர்த்துப் பாயும் இரு காளைகளும் செதுக்கப்பட்டுள்ளன. எதிரிகளிடமிருந்து ஊரின் கால்நடைகளை மீட்கும் ஆநிரை மீட்பு (வெட்சி-கரந்தைப் போர்) போரில் இவ்வீரன் வீரமரணம் அடைந்ததை இச்சிற்பம் உறுதிசெய்கிறது.500 மீட்டர் இடைவெளியில் இவை இருந்தால் இங்கு ஒரு பாளையக் கோட்டை அரணும் காவற்சாவடியும் இருந்திருக்க வேண்டும். கி.பி.,15-ஆம் நூற்றாண்டின் பிற்காலப் பாண்டியர்,விஜயநகர காலத்து வாள், வில் போர்க்கலையிலிருந்து, கி.பி.,18-ஆம் நூற்றாண்டின் நாயக்கர்,பாளையக்காரர் காலத்துத் துப்பாக்கிப் பயன்பாடு வரையிலான ஆயுதப் பரிணாமத்தை ஒரே இடத்தில் வரிசையாகப் பதிவுசெய்துள்ளது என்றார்.