ஜெயேந்திரரின் 92வது ஜெயந்தி உத்சவம்: காஞ்சியில் விமரிசை
காஞ்சிபுரம்: சங்கர மடத்தின் 69வது மடாதிபதியாக இருந்த ஜெயேந்திரரின், 92வது ஜெயந்தி உத்சவம் விமரிசையாக நடந்தது.
காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 69வது மடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 92வது ஜெயந்தி உத்சவத்தையொட்டி, ஓரிக்கையில் உள்ள மஹா சுவாமிகள் மணிமண்டபத்தில், அவரது திருஉருவச்சிலைக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அதன் அருகே வைக்கப்பட்டிருந்த ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் பாதுகைக்கு, காஞ்சி மடாதிபதி விஜயேந்திரர், இளைய பீடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திரர் சுவர்ண பாதுகா பூஜை நடத்தினர். ஏற்பாடுகளை ஓரிக்கை முகாம் மேலாளர் ஜானகிராமன் தலைமையிலான குழுவினர் மேற்கொண்டிருந்தனர். காஞ்சிபுரம் சங்கர மடத்தில் உலக நன்மைக்காக, நேற்று காலை சிறப்பு யாகம் நடந்து. காஞ்சிபுரம் சங்கரா கல்லுாரி சார்பில், கல்லுாரி வளாகத்திலும், காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவில் அருகிலும் கல்லுாரி முதல்வர் கலைராம வெங்கடேசன் தலைமையில் அன்னதானம் வழங்கப்பட்டது. சங்கரமடம் நுழைவாயிலில், ஜெயேந்திரர் பிளாட்டினம் ஜூப்ளி டிரஸ்ட் மற்றும் காஞ்சி காமாட்சி சங்கரமடம் வரவேற்பு குழு சார்பில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.