உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆற்றில் நீர் பெருக... ஆனந்தம் பொங்கியது; கோவில்களில் சிறப்பு வழிபாடு

ஆற்றில் நீர் பெருக... ஆனந்தம் பொங்கியது; கோவில்களில் சிறப்பு வழிபாடு

திருப்பூர்: ஆடிப்பெருக்கு என்பது ஒரு திருநாள் மட்டுமல்ல; நீரோடும், நிலத்தோடும், மனித வாழ்வோடும் பின்னிப் பிணைந்த ஒரு மரபு. அந்த மரபின் மணம் நேற்று திருப்பூர் மாவட்டம் முழுவதும் மீண்டும் பரவியது.


அதிகாலை முதலே வீடுகள் விழாக்கோலம் பூண்டன. நீராடி புத்தாடை அணிந்த மக்கள், ஆறுகள், குளங்கள், கோவில்களை நோக்கி பக்தியுடன் பயணித்தனர். அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. வீடுகளில் கலவைச்சோறு உள்ளிட்ட படையல்கள் சமைத்து, முன்னோரை நினைவுகூர்ந்து வழிபடும் மரபும் தொடர்ந்தது. திருப்பூர் மாவட்டத்தை ஒட்டியுள்ள பவானிசாகர் அணைக்கரையிலும் ஆடிப்பெருக்கு உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. குடும்பம் குடும்பமாக திரண்ட மக்கள், நீர்நிலையின் கரையில் நேரம் கழித்து திருவிழாவை கொண்டாடினர். பில்லுார் அணையில் இருந்து திறக்கப்படும் நீரையே நம்பி இருக்கும் பவானிசாகருக்கு, நேற்று மிதமான அளவில் நீர்வரத்து இருந்தது விழாவுக்கு மேலும் சிறப்பு சேர்த்தது. ஆடிப்பட்டம் தேடி விதை என்ற பழமொழி வெறும் சொல்லல்ல; ஒரு விவசாய ஆண்டின் தொடக்க இசை. ஆடியில் விதைக்கப்படும் விதை, தையில் அறுவடையாக திரும்பி வரும் என்ற நம்பிக்கையோடு, விவசாயிகளும் இந்நாளை உழவின் நன்னாளாகக் கொண்டாடினர். காலம் மாறிவிட்டது. ஆனால், கிராமங்களில் ஆலமரக் கிளையில் கட்டப்பட்ட துாரி இன்னும் ஆடிக்கொண்டே இருக்கிறது. அந்தத் துாரியில் ஆடியது குழந்தைகள் மட்டுமல்ல; தலைமுறைகள் கடந்து வந்த பாரம்பரியமும் தான். புதிய காலத்தின் வேகத்திலும், பழைய காலத்தின் வாசத்தை மறக்காமல் காத்திருக்கும் அந்தக் காட்சிகள்தான், ஆடிப்பெருக்கின் உண்மையான அழகு.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !