உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குருவாயூரில் வரும் 23ல் 422 ஜோடிகளுக்கு திருமணம் நடப்பாண்டு முன்பதிவில் சாதனை

குருவாயூரில் வரும் 23ல் 422 ஜோடிகளுக்கு திருமணம் நடப்பாண்டு முன்பதிவில் சாதனை

பாலக்காடு: குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், வரும், 23ம் தேதி 422 திருமணங்களுக்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கேரள மாநிலத்தில் பிரசித்தி பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், திருமணங்கள் அதிகளவில் நடக்கின்றன. வரும், 23ம் தேதி மட்டும் 422 திருமணங்களுக்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. இதேபோல், 30ம் தேதி 338 திருமணங்களும், செப்., 13ம் தேதி 320 திருமணங்களும் நடைபெற உள்ளன.

இதையொட்டி, தேவசம் தலைவர் கோபிநாத் தலைமையில், மாவட்ட கலெக்டர் ஷிகா சுரேந்திரன் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

திருமண நிகழ்வுகளை விரைந்து முடிக்க ஏதுவாக, குறிப்பிட்ட மூன்று நாட்களிலும் அதிகாலை 4:00 மணி முதலே திருமண சடங்குகள் துவங்கும். தாலி கட்டும் நிகழ்வுகளுக்காக கூடுதலாக, 6 மண்டபங்கள் அமைக்கப்பட்டு, கோவில் அதிகாரிகள் மற்றும் மங்கள வாத்தியக் குழுவினர் பணியமர்த்தப்படுவர்.

திருமணக் குழுவினருடன் புகைப்படக் கலைஞர்கள் உள்பட மொத்தம் 24 நபர்கள் மட்டுமே மண்டபத்திற்குள் அனுமதிக்கப்படுவர். உறவினர்களின் வருகையை குடும்பத்தினர் கட்டுப்படுத்த வேண்டும், என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கிழக்கு நடைப்பகுதி முழுமையாக ஒருவழிப் பாதையாக மாற்றப்படும். தெற்கு நடைப்பந்தலில் ‘டோக்கன்’ பெற்று, மேல்பத்தூர் ஆடிட்டோரியம் வழியாக கிழக்கு நடை மண்டபத்திற்கு சென்று திருமணம் செய்ய வேண்டும். திருமணம் முடிந்ததும் மீண்டும் தெற்கு நடை வழியாக மட்டுமே வெளியேற அனுமதிக்கப்படுவர்.

கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு, கோவிலின் உள்பிரகாரத்தில் பக்தர்கள் மேற்கொள்ளும் அங்கப்பிரதக் ஷணம், அடிப் பிரதக் ஷணம் மற்றும் சயனப் பிரதக் ஷணங்களுக்குத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே வாகனங்களை நிறுத்த வேண்டும்.

அபரிமிதமான கூட்டம் எதிர்பார்க்கப்படுவதால், நிர்வாக நடைமுறைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறும் குருவாயூர் தேவசம் கேட்டுக்கொண்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !