மாரியம்மன் கோவில் பழைய தேர் நகராட்சி வசம் ஒப்படைப்பு
உடுமலை: உடுமலை மாரியம்மன் கோவில் பழைய தேர், நகராட்சி அலுவலக வளாக செம்மொழி பூங்காவில் வைக்க, நகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டது.
உடுமலை நகராட்சி பழைய அலுவலக கட்டடம் நுாற்றாண்டு பழமையானதாகும். இந்த கட்டடத்தை பாதுகாக்கும் வகையிலும், உடுமலை பகுதிகளில் சேகரிக்கப்பட்ட பழங்கால பொருட்கள், வரலாற்றை ஆவணப்படுத்தும் வகையில் அருங்காட்சியகம் அமைக்கப்படும்.
வளாகத்தின் முன் பகுதியில், செம்மொழி பூங்கா மற்றும் மாரியம்மன் கோவில் பழைய தேர் காட்சிக்கு வைக்கப்படும் என, நகராட்சியில் மூன்று ஆண்டுக்கு முன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தற்போது பழைய அலுவலக கட்டடமான தாகூர் மாளிகையில், மாவட்ட அரசு இசைப்பள்ளி துவக்கப்பட்டுள்ளதோடு, விடுதலைப்போராட்ட வீரர் தளி எத்தலப்பர் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், செம்மொழி பூங்கா அமைக்கும் திட்டம் இழுபறியாகி வருகிறது.
இந்நிலையில், உடுமலை தேரோடும் வீதிகளில், பல நுாறு ஆண்டுகளாக, அம்மன் பவனி வந்த, பழைய மரத்தேர் நேற்று முறைப்படி, நகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டது. நகராட்சி தலைவர் மத்தீன், பரம்பரை அறங்காவலர் ஸ்ரீதர், செயல்அலுவலர் மல்லிகா ஆகியோர் பங்கேற்றனர்.
ஆனால், புதிய தேர் அமைக்கும் வரை, பழைய தேர் நல்ல முறையில், மாரியம்மன் கோவில் தேரோட்டத்திற்கு பயன்படுத்தப்பட்டு வந்தது. நேற்று ஒப்படைக்கப்பட்ட தேரில், சக்கரங்கள் இல்லாமலும், பல அடுக்குகள் உள்ள நிலையில், தேரின் கீழ் பகுதி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
தேர் கலசம் மற்றும் பல அடுக்குகள் மற்றும் தேருக்கு ஆதாரமான சக்கரங்கள் மாயமாகியுள்ளது.
எனவே, பழைய தேரின் அனைத்து பாகங்களையும் சேகரித்து, தேரை புதுப்பிக்கவும், சக்கரங்களுடன், மேல் அடுக்கு கலசம் வரை அமைத்து, உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் அழகு படுத்தப்பட்டு, அதற்கு பின் காட்சிப்படுத்த வேண்டும்.
அதோடு, செம்மொழி பூங்கா மற்றும் தொல்பொருட்கள், புராதான சின்னங்களுடன் கூடிய அருங்காட்சியகம் அமைக்கவும் வேண்டும்.
அதிகாரிகள் கூறியதாவது: மாரியம்மன் கோவிலுக்கு, புதிதாக எண்கோண வடிவில் தேர் செய்யப்பட்டு, 2022ம் ஆண்டு முதல், 4 ஆண்டுகளாக புதிய தேரில் அம்மன் தேரோட்டம் நடந்து வருகிறது.
புராதான சின்னமாகவும், உடுமலைக்கு பெருமை சேர்க்கும் வகையில் உள்ள, பழைய மரத்தேர், உடுமலை நகராட்சி, செம்மொழி பூங்காவில், காட்சிப்பொருளாக, மேற்கூரை, கண்ணாடி கூண்டு அமைத்து, அழகான புராதான சின்னமாக பாதுகாக்கும் வகையில் வழங்க வேண்டும், என நகராட்சி கோரிக்கை ஏற்று, நேற்று முறைப்படி, மாரியம்மன் கோவில் பழைய தேர் ஒப்படைக்கப்பட்டது.
இவ்வாறு, தெரிவித்தனர்.