தாராபுரம் அமராவதி ஆற்றங்கரையில் வரும் செப். 6 முதல் 8 வரை தீப ஆரத்தி
திருப்பூர்: தாராபுரம் அமராவதி ஆற்றங்கரையில் வரும் செப். 6 முதல் 8 வரை மூன்று நாள், அகில பாரத சன்னியாசிகள் சங்கம் சார்பில், அமராவதி தீப ஆரத்தி திருவிழா நடைபெற உள்ளது. மூன்று நாட்களிலும் ஆன்மிக கருத்தரங்கம், இயற்கையை வணங்குதல் உள்ளிட்ட பாரம்பரிய, கலாச்சார நிகழ்வுகள், கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. நாடு முழுவதிலிருந்தும் துறவியர், மடாதிபதிகள், ஆதீனங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர். துவக்க நாளான 6-ம் தேதி மாலை 4:00 மணிக்கு, 1,008 பேர் தனித்தனியே பங்கேற்கும் வகையில் அமராவதி ஹோமம் நடைபெறும். நிறைவு நாளில் துறவியர் பேரணி மற்றும் மாநாடு நடைபெறும். நிகழ்ச்சியை தென்சேரிமலை ஆதினம் முத்துசிவராமசாமி அடிகளார் தலைமை வகித்து நடத்துகிறார். இதில் பொதுமக்கள் தங்கள் குடும்பத்துடன் பங்கேற்று அமராவதி அன்னைக்கு தீப ஆரத்தி நடத்த வேண்டும் என மதுரை ஆதினம் விஸ்வலிங்க தம்பிரான் சுவாமிகள் அழைப்பு விடுத்துள்ளார்.