உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேதகிரீஸ்வரர் கோவில் நுழைவாயிலில் நிறுத்தப்படும் வாகனங்களால் அவதி

வேதகிரீஸ்வரர் கோவில் நுழைவாயிலில் நிறுத்தப்படும் வாகனங்களால் அவதி

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில் அடிவார பகுதியில், வாகனங்கள் நிறுத்தப்படுவதால், பக்தர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

திருக்கழுக்குன்றத்தில் ஹிந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில், வேதகிரீஸ்வரர் கோவில் உள்ளது. சிவபெருமான், வேதமலைக்குன்றில் வேதகிரீஸ்வரர் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இக்கோவிலில் பண்டிகை மற்றும் விஷேச நாட்களில் ஏராளமான பக்தர்கள் சுவாமியை தரிசிக்கின்றனர். பவுர்ணமி தினத்தில் பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.

இந்நிலையில், கோவில் அடிவாரத்தின் நுழைவாயில் பகுதியில், பக்தர்கள் தங்கள் இருசக்கர வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தி விட்டு செல்கின்றனர். இதனால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் குறுகிய இடைவெளியில் நுழைந்து சென்று அவதிப்பட்டு வருகின்றனர். பண்டிகை நாட்களில், கோவிலின் அடிவார பகுதி வாகன நிறுத்தும் இடமாக மாறி விடுகிறது. கூட்ட நெரிசலின்போது, சாலையில் இருந்து கோவில் படிகளில் ஏறவும், படிகளில் இருந்து கீழே இறங்கவும் முடியாமல் திணறுகின்றனர். பக்தர்கள் நடமாட்டம் கருதி, இடையூறுகளை தவிர்க்க கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !