உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சென்னை துலுக்காத்தம்மன் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை

சென்னை துலுக்காத்தம்மன் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை

சென்னை; ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட தண்டையார்பேட்டை சாஸ்திரி நகரில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ துலுக்காத்தம்மன் கோவில் கும்பாபிஷேக விழா விமரிசையாக நடைபெற்றது.


கடந்த 5ஆம் தேதி காலை கோ பூஜை மற்றும் விநாயகர் பூஜையுடன் விழா தொடங்கியது. இதனைத் தொடர்ந்து, திருக்கோவில் வளாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு, புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் வண்ண வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கலசங்களில் வைக்கப்பட்டது. யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு, காலை மற்றும் மாலை வேளைகளில் யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. இன்று காலை நான்காம் கால பூஜை மற்றும் பூர்ணாஹுதி நடைபெற்றது. பூஜகர் பரணி குருக்கள் மந்திரங்கள் முழங்க, துலுக்காத்தம்மன் திருக்கோவில் குழுவினர், நிர்வாகிகள், சிறப்பு விருந்தினர்களான விருதுநகர் சண்முகம் செட்டியார் குடும்பத்தினர் மற்றும் காஞ்சி சங்கராச்சாரியார் மடத்திலிருந்து பிரசாதங்களுடன் வருகை தந்த சுவாமிகள் முன்னிலையில் யாகசாலை பூஜைகள் சிறப்பாக நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து, யாகசாலையில் பூஜை செய்யப்பட்ட புனித கலசங்களை பக்தர்கள் தலையில் சுமந்தவாறு, மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக கோபுர விமான கலசத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, விமான கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள், பெண்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு, “ஓம் சக்தி, பராசக்தி, ஆதிபராசக்தி” என பக்தி கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டு, சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பின்னர் மூலவர் அருள்மிகு துலுக்காத்தம்மனுக்கு கும்பாபிஷேகத்திற்காக பூஜை செய்யப்பட்ட புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை நேரத்தில் அலங்கரிக்கப்பட்ட அம்மன் திருவீதி உலா விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !