தன் தங்கையான ஜாயுடன் தோழி வீட்டிற்கு சென்றாள் எஸ்தர். அவர்களுக்கு குடிக்க டீ கொண்டு வந்தாள் தோழியின் மகள். கண் இமைக்கும் நேரத்தில் டீ வைத்த கப் அன் சாசர் உடையும் சத்தம் கேட்டது. ''தவறுதலாக கீழே போட்டு விட்டேனே'' என்றாள் எஸ்தர்.
'வெளிநாட்டில் வாங்கிய கப்பாச்சே... வீட்டுக்கு விருந்தினர் வந்தாலே இப்படி தொல்லை தான் வரும்'' என மனதிற்குள் வருந்தினாள் தோழி. அவளின் மகளும் சட்டென்று சமையல் அறைக்குள் இருந்த அம்மாவிடம் ஓடினாள்.
'டீயைக் கையால் கூட இன்னும் தொடவில்லை. உங்கள் தோழியின் மகள் செய்த தவறை நீங்கள் வலிய ஏற்றுக் கொண்டீர்களே...'' எனக் கேட்டாள் ஜாய். 'இப்படி செய்யாவிட்டால் எங்களின் நட்பு முறியும்.
தோழியின் மகள் வயதில் சின்னவள் தானே.... பார்க்கும் போதெல்லாம் காரணமின்றி வெறுப்பைக் காட்டுவாள். பொறுமையுடன் விட்டுக் கொடுப்போம் என்றே இப்படி சொன்னேன்'' என்றாள்.
இதை மறைந்திருந்து கேட்ட தோழி ஓடி வந்து கட்டிக் கொண்டாள். உண்மையான அன்பு ஒருபோதும் தோற்பதில்லை.