ADDED : ஜூலை 26, 2024 10:56 AM

* கைலாயத்தில் திருநீற்றுக் கொப்பரை ஏந்தியபடி சிவகணங்களில் ஒருவர் சிவனுக்கு அருகிலேயே இருப்பார்.
* 'திருநீறு பூசியவர்களுக்கு எல்லாம் நான் அடிமை' என்று சொன்ன சிவனடியார் சுந்தரர்.
* சமண மதத்தை சேர்ந்தவரான நின்றசீர் நெடுமாறன் மதுரையை ஆட்சி செய்தார். இவரது மனைவி மங்கையர்க்கரசி சிவபக்தி மிகுந்தவர். இதனால் இவர் கணவனுக்கு பயந்து திருநீறை மார்பில் பூசிக் கொண்டு சிவனை வழிபட்டார்.
* திருநீற்றின் பெருமைகளை பாடியவர் திருஞானசம்பந்தர். இவர் பாடியது திருநீற்றுப் பதிகம். இதற்கு அர்த்தநாரி பதிகம், மாதொருபாகன் பதிகம் என்றும் பெயருண்டு.
* 'சமணர்களை வாதத்தில் வென்றது, கூன்பாண்டியனை நேராக்கியது' போன்ற அற்புதங்கள் திருநீற்றால் நிகழ்ந்தவை.
* எதிரியாக இருந்தாலும் திருநீறு பூசியிருப்பவரை சிவனாக கருதி வழிபட்டவர்கள் - மெய்ப்பொருள் நாயனார், ஏனாதி நாயனார்.
* கங்கையை தலையில் சூடிய சிவபெருமானின் சின்னமான திருநீற்றை மங்காமல் பூசி மகிழுங்கள்; அதுவே சிறந்த பாதுகாப்பு என்றவர் சித்தரான திருமூலர்.
கங்காளன் பூசும் கவசத் திரு நீற்றை
மங்காமல் பூசி மகிழ்வரே யாமாகில்
தங்கா வினைகளும் சாரும் சிவகதி
சிங்காரமான திருவடி சேர்வரே.
* தென்காசியை ஆட்சி செய்தவர் அதிவீரராம பாண்டியர். இவர் பாடிய கூர்ம புராணத்தில், 'திருநீறு பூசியவரைக் கண்டால் இவர் நம்மைச் சேர்ந்தவர் எனச் சிவபெருமான் கருதுவார்' என்கிறார்.
* சூரியன் உதிக்கும் முன்பாக நீராடி திருநீறு பூசி, தன் வாழ்நாள் முழுவதும் அன்றாடம் பூஜை செய்தவர் தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாத ஐயர்.
* நான்காம் தமிழ்ச்சங்க தலைவர் பாண்டித்துரைத் தேவர். இவர் திருநீற்றுப்பையை எப்போதும் இடுப்பில் வைத்திருப்பார்.