எஸ்.மனோண்மணி, பன்னிமடை, கோயம்புத்துார்.
*அனுமன், பைரவர், வீரபத்திரருக்கு வடைமாலை சாத்துவது ஏன்?
இந்த மூவரும் ருத்ராம்ச தெய்வங்கள் அத்துடன் வேகமானவர்கள். இவர்களை குளிர்ச்சிப்படுத்தும் விதத்தில் வெண்ணெய், வடைமாலை சாத்தினால் சாந்தமாகி கேட்ட வரத்தை அளிப்பர்.
ப.ரவி, பழநி, திண்டுக்கல்.
*விருந்தினர் ஊருக்கு புறப்பட்டதும் வீட்டை கழுவலாமா?
உடனடியாக வேண்டாம். காலையில் புறப்பட்டால் மதியம் கழுவுங்கள். மாலையில் விளக்கேற்றிய பின் கழுவுவதை தவிருங்கள். சுவாமி முன் விளக்கு எரிய வேண்டிய நேரம் காலை 6:00 - 8:00, மாலை 5:30 - 7:30 மணி
எம்.கே.பிரபு, மேலகிருஷ்ணன்புதுார், கன்னியாகுமரி.
*இடவசதி இல்லாத வீட்டில் குலதெய்வம், விநாயகர் இதில் யார் படத்தை வைக்கலாம்?
இருவருமே முக்கியம். உங்கள் மனதில் இடம் இருந்தால் வீட்டிலும் இடம் கிடைக்கும்.
என்.ராமச்சந்திரன், ஆர்.கே.புரம், டில்லி.
*சந்திராஷ்டமம் எத்தனை மணி நேரம் நீடிக்கும்?
ஒரு நட்சத்திரத்தில் 24 மணி நேரம் சந்திராஷ்டமம் இருக்கும்.
கே.அருணாசலம், சிவாஜி நகர், பெங்களூரு.
*இல்லறத்தில் இருப்பவர்கள் தவம் செய்ய முடியுமா...
துறவியைப் போல காட்டில் தவம் செய்ய அவசியமில்லை. தான் ஒழுக்கமாக வாழ்வதோடு மற்றவர்களையும் பின்பற்றச் செய்வதே இல்லறத்தாரின் கடமை.
ஆர்.பவித்ரா, சிதம்பரம், கடலுார்.
*சுவாமிக்கு இட்ட படையலை உடனே எடுத்து சாப்பிடலாமா?
சாப்பிடக் கூடாது. பக்தர்களுக்கு கொடுத்த பின்பே சாப்பிடலாம்.
வ.கோபால், சம்சிகாபுரம், விருதுநகர்.
*சிவ வடிவங்களில் சோமாஸ்கந்தருக்கு முக்கியத்துவம் ஏன்?
சிவபெருமானின் 25 திருக்கோலங்களில் முக்கியமானது சோமாஸ்கந்தம். உண்மை(சிவம்), அறிவு(பார்வதி) இணைந்திருக்கும் போது ஆனந்தம்(முருகன்) உண்டாகும் என்பதை உணர்த்துவது இது. இவரை வழிபட்டால் மகிழ்ச்சி உண்டாகும்.
டி.சீனிவாசன், பெருங்களத்துார், செங்கல்பட்டு.
*கருக்கலைப்பு, குடும்பக்கட்டுப்பாடு செய்வது பாவமா?
ஆம். உயிர்க்கொலை போல இவையும் பெரும் பாவங்களே.
மோ.நிர்மலா, அம்பாசமுத்திரம், திருநெல்வேலி.
*கல்யாண வயதில் பெண் இருந்தால் சுமங்கலி பூஜையை தினமும் வீட்டில் செய்யலாமா?
வெள்ளிக்கிழமை தோறும் பூஜை செய்யுங்கள். தங்களின் நன்மைக்காக பெற்றோர் பாடுபடுகிறார்கள் என்பதை அவர்கள் உணர வேண்டும்.

