
கே.பூரணி, திருமங்கலம், மதுரை.
*விநாயகருக்கு தேங்காய் மாலை சாத்தலாமா
சாத்தக் கூடாது. கடவுளுக்கு அபிஷேகம், அலங்காரம் செய்யலாம். தேங்காய் மாலையை நாம் கழுத்தில் அணிந்தால் எவ்வளவு சிரமமாக இருக்கும் அதுபோலத்தானே...
எம்.கிஷோர், பசவன்குடி, பெங்களூரு.
*பெண் பாவம் பொல்லாதது என்கிறார்களே... ஏன்
கருணையும்,பொறுமையும் கொண்டவர்கள் பெண்கள். கடவுளின் அம்சமான அவர்களை துன்புறுத்துவது பாவம்.
வி.ஆதித்யா, ஆர்.கே.புரம், டில்லி.
*நல்லவராக இருந்தும் எங்களின் கஷ்டம் தீரவில்லையே...
ராமாயணம், மஹாபாரதத்தை நீங்கள் படித்ததில்லையா... ராமர், தர்மர், அரிச்சந்திரனை விட நம் கஷ்டம் பெரிதா என்ன... முற்பிறவியில் செய்த பாவ, புண்ணியத்தின் விளைவே இந்தப்பிறவி. இதை புரிந்து கொண்டால் போதும்.
சி.வரலட்சுமி, ஆவடி, திருவள்ளூர்.
*கலியுகத்தில் அதர்மம் தலைவிரித்தாடுகிறதே...
ஆட்சியாளரைப் பொறுத்தே நாட்டில் ஒழுக்கம் இருப்பதைப் போல யுக புருஷர்களின் குணத்தைப் பொறுத்தே அந்தந்த யுகங்களின் செயல்பாடு இருக்கும். கலிபுருஷனின் ஆட்சி நடக்கும் இந்த யுகத்தில் தீமை அதிகரிக்கும். கடவுளின் திருநாமத்தை ஜபித்தால் தப்பிக்கலாம். (கிருத, திரேதா, துவாபர, கலி என யுகங்கள் நான்கு)
எல்.கணேஷ், மல்லாங்கிணறு, விருதுநகர்.
*கருவறையைப் போல் பாலாலய சன்னதியிலும் அருள் கிடைக்குமா?
அருள் கிடைக்கும். கருவறையில் உள்ள தெய்வமே பாலாலயத்திலும் உள்ளது.
எம்.ரஜினி, திருவட்டாறு, கன்னியாகுமரி.
*வைஷ்ணவ ஏகாதசி, ஸ்மார்த்த ஏகாதசி என வெவ்வேறு நாட்களில் ஏகாதசி வருகிறதே எது சரியானது?
அமாவாசை, ஏகாதசி, கார்த்திகை என விரத நாட்கள் இரண்டு நாளாக வருவது உண்டு. இந்த வேறுபாடு ஏற்பட நம் குருநாதர்கள் பின்பற்றிய முறைதான் காரணம். உங்களின் குருநாதர் காட்டிய வழியைப் பின்பற்றுங்கள்.
ஆர்.மாணிக்கவள்ளி, பல்லடம், திருப்பூர்.
*சமையல் செய்யும்போது சொல்ல வேண்டிய ஸ்லோகம் என்ன?
இதற்கென்று ஸ்லோகம் எதுவும் இல்லை. சஹஸ்ர நாமம், தேவாரம், நாலாயிர திவ்ய பிரபந்தம் சொல்லுங்களேன்.
டி.வைதேகி, நெய்வேலி, கடலுார்.
*வீடுகட்டுவோர் வாஸ்து நாளில் விரதம் இருக்க வேண்டுமா?
நமக்காக வீடு கட்டுகிறோம். அதில் நம் இஷ்ட தெய்வத்தையும் குடிவைக்கப் போகிறோம். அதனால் பூமிபூஜை முடியும் வரை விரதமிருப்பது நல்லது.
வி.பரமேஸ்வரன், கழுகுமலை, துாத்துக்குடி.
*நண்பர் ஒருவர் எனக்கு உதவி செய்துகொண்டே இருக்கிறார். அவருக்கு கைமாறு செய்ய முடியவில்லை. என்ன செய்யலாம்?
நண்பர்களுக்கு செய்யும் கைமாறு என்பது அவர் மீது அன்பு செலுத்துவதே.

