sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

தெய்வ தரிசனம்! - 2 (23)

/

தெய்வ தரிசனம்! - 2 (23)

தெய்வ தரிசனம்! - 2 (23)

தெய்வ தரிசனம்! - 2 (23)


ADDED : ஏப் 05, 2019 02:47 PM

Google News

ADDED : ஏப் 05, 2019 02:47 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குமரக்கோட்டம் சுப்பிரமணியர்

காஞ்சிபுரம் என்றாலே நினைவுக்கு வருவது காமாட்சியம்மன் கோயில். இக்கோயிலுக்கும், காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்கும் நடுவிலுள்ள தலம் குமரக்கோட்டம்.

'கோட்டம்' என்பதற்கு 'கோயில்' என்பது பொருள். குமரனாகிய முருகன் குடியிருப்பதால் 'குமரக்கோட்டம்'.

காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து ஒரு கி.மீ., தொலைவில், சங்கர மடத்துக்குச் செல்லும் சாலையில் உள்ளது.

பிறப்பற்ற நிலையை வரமாகத் தரும் ஞானவள்ளலாக முருகன் இங்குள்ளார். கச்சியப்ப சிவாச்சாரியர், அருணகிரிநாதர், பாம்பன் சுவாமிகள் உள்ளிட்ட அருளாளர்கள் இவரைப் பாடியுள்ளனர்.

ஏகாம்பரேஸ்வரர் (சிவன்), காமாட்சியம்மன் (பார்வதி) கோயிலுக்கு நடுவில் குமரக்கோட்டம் உள்ளது. இத்தகைய அமைப்பிற்கு சோமாஸ்கந்த அமைப்பு என்ற பெயருண்டு. தாமதமாகும் திருமணம் நடந்தேற இவரை வழிபடுவது சிறப்பு.

'பிரம்ம சாஸ்தா' வடிவில் அதாவது படைப்புத் தொழில் புரியும் கோலத்தில் முருகன் இங்குள்ளார். ருத்திராட்ச மாலை, கமண்டலத்தை கைகளில் தாங்கியிருக்கிறார். மான்தோல் ஆடையும், தர்ப்பையால் ஆன அரைஞாண் கயிறும் அணிந்திருக்கிறார்.

ஞானம் அருள்பவராக முருகன் இருப்பதால் கருவறையில் வள்ளி, தெய்வானை இல்லை. தனி சன்னதிகளில் உள்ளனர்.

தேவியர் இல்லாமல் முருகன் தனித்திருப்பது ஏன்? அதற்கான வரலாற்றை இனி பார்ப்போமா...!

ஒருமுறை சிவனை தரிசிக்க கயிலாய மலைக்குச் சென்றார் படைப்புக்கடவுள் பிரம்மா. தேவர்கள் அனைவரும் அவருடன் வந்தனர். வாசலில் விளையாடிக் கொண்டிருந்தார் சிறுவனான முருகப்பெருமான்.

'சிவபெருமானின் திருக்குமாரர்' என்பதால் தேவர்கள் அவரை வணங்கினர். ஆனால் பிரம்மா சிறிதும் பொருட்படுத்தவில்லை. படைப்புத் தொழிலுக்கு அதிபதி என்னும் அகந்தையே அதற்கு காரணம்.

பிரம்மாவிற்கு பாடம் புகட்ட திருஉள்ளம் கொண்டார் முருகன்.

'பிரம்ம தேவரே...' என அழைத்தார்.

''என்ன?'' என்பது போல அலட்சியமாக திரும்பினார் பிரம்மா.

''தாங்கள் யார்?''

''படைப்புத் தொழிலின் அதிபதி''

''தங்களின் தொழிலுக்கு ஆதாரமான மந்திரம்?''

'''ஓம்' என்னும் பிரணவம்''

''அதன் பொருளை விளக்கலாமா'' என முருகன் கேட்க பதில் தெரியாமல் விழித்தார் பிரம்மா.

வெகுண்டெழுந்த முருகன் அவரை சிறையில் அடைத்து விட்டு, தானே படைப்புத் தொழிலை மேற்கொண்டார்.

இந்த விஷயம் கயிலைநாதரான சிவனுக்கு தெரிந்தது. உடனே நந்திதேவரை அனுப்பி பிரம்மாவை விடுவிக்குமாறு உத்தரவிட்டார் சிவன். ஆனால் முருகன் அதனை ஏற்கவில்லை. பின்னர் சிவபெருமானே தலையிட்டு பிரம்மாவை விடுவித்தார்.

முதலில் சிவனின் உத்தரவை மீறியதால் முருகனுக்கு தோஷம் ஏற்பட்டது. அதிலிருந்து விடுபடுவதற்காக காஞ்சிபுரத்தில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டார் முருகன். இந்த சிவலிங்கம் 'தேவசேனாபதீஸ்வரர்' என்னும் பெயரில் இத்தலத்தில் உள்ளது.

இங்குள்ள நாகசுப்பிரமணியர் என்னும் உற்ஸவர் சிலை சிறப்பு மிக்கது. ஐந்துதலை நாகம் குடைப்பிடிக்க அதனடியில் முருகன் நிற்பது போல சிலை வடிக்கப்பட்டுள்ளது. இவரை வழிபட்டால் திருமணத் தடை, சர்ப்ப, ராகு, கேது தோஷங்கள் விலகும்.

சந்தான கணபதி, தண்டபாணி, ஸ்ரீதேவி பூதேவி சமேத உள்ளம் உருகும் பெருமாள், மார்க்கண்டேயர், சோமாஸ்கந்தர், நவவீரர்கள், தட்சிணாமூர்த்தி, பைரவர், சூரியன், நவக்கிரகங்கள் சன்னதிகள் உள்ளன. கச்சியப்பர், அருணகிரிநாதர், வள்ளலார், பாம்பன் சுவாமிகள் ஆகியோருக்கும் இங்கு சிலைகள் உள்ளன.

சிறுவனாக முருகன் காட்சியளித்து பாம்பன் சுவாமிகளுக்கு வழிகாட்டியதும், கந்தபுராணம் என்னும் நுால் அரங்கேற்றப்பட்டதும் இங்கு தான்.

11ம் நுாற்றாண்டில் இக்கோயிலின் அர்ச்சகராக பணியாற்றிய கச்சியப்ப சிவாச்சாரியாரின் கனவில் தோன்றி கந்தபுராணத்தை எழுத உத்தரவிட்டார் முருகன். இதற்காக 'திகடச் சக்கரம்' என்னும் பாடல் அடியை முதல் வரியாக கொடுத்ததோடு, கச்சியப்பரின் பாடல்களை திருத்தியும் கொடுத்தார். தினமும் இரவு பூஜை முடிந்ததும் ஓலைச்சுவடிகளை முருகனின் பாதத்தில் வைத்து விட்டு நடை சாத்தி வந்தார் கச்சியப்பர்.

கந்தபுராணம் அரங்கேறிய மண்டபம் தற்போது கச்சியப்பர் நுாலகமாகவும், கச்சியப்ப சிவாச்சாரியாரின் வெண்கலச்சிலை தெற்கு பிரகாரத்திலும் உள்ளது.

சஷ்டி, கார்த்திகை, செவ்வாய், வியாழக்கிழமைகளில் கூட்டம் அதிகமாக இருக்கும்.

வைகாசி பிரம்மோற்ஸவ திருவிழாவில் வள்ளியோடும், ஐப்பசி சஷ்டி விழாவில் தெய்வானையுடனும் திருக்கல்யாண விழா நடக்கும்.

வளர்பிறை சஷ்டி திதி, செவ்வாய், வெள்ளிக்கிழமையன்று பிரகாரத்தை 108 முறை வலம் வந்தால் நினைத்தது நிறைவேறும்.

வழிபடுவோருக்கு ஞானம், பிறப்பு அற்ற நிலையை அருளும் இத்தல முருகனுக்கு தேன் அபிஷேகம் செய்வது சிறப்பு. இதனை தரிசித்தால் நம் வாழ்வு தேனாக இனிக்கும்.

ஞானக்கனியாக முருகன் உள்ளதால் இங்கு தியானம் செய்வோருக்கு நிம்மதி, பொறுமை, மகிழ்ச்சி, மனத்தெளிவு கிடைக்கும்.

முன்வினைப்பயனால் துன்பத்தில் தவிப்போர், வாழ்வில் சுகம் என்பதே அறியாமல் வருந்துவோர் காஞ்சிபுரம் குமரக்கோட்டம் சுப்பிரமணியரை ஒருமுறை தரிசித்தால் போதும். பனி போல கஷ்டம் விலகும். வாழ்க்கை அர்த்தமுள்ளதாக மாறும்.

தரிசனம் தொடரும்

தொடர்புக்கு: swami1964@gmail.com

பி. சுவாமிநாதன்






      Dinamalar
      Follow us