ADDED : மே 26, 2019 08:37 AM

ஒருநாள் காஞ்சிப்பெரியவரிடம் தீர்த்தப் பிரசாதம் பெறுவதற்காக நீண்ட வரிசை நின்றிருந்தது. அதில் ஆசாரமான ஒரு பெண் பக்தை நீராடி, தலைமுடியை உலர்த்தி முடிச்சிட்டபடி இருந்தாள்.
அவள் எதிர்பாராமல் முடிச்சு அவிழவே, கூந்தல் விரிந்தது. பரபரப்புடன் தலைமுடியை கைகளால் சேர்த்து மீண்டும் முடிந்து கொண்டாள். தலைமுடியைத் தொட்டதால் சுத்தக் குறைவாகி விட்டதே? சுவாமிகளிடம் எப்படி தீர்த்தம் பெறுவது? என தயங்கினாள்.
வரிசையும் வேகமாக நகரவே, பெரியவருக்கு அருகில் வந்து விட்டாள். ஆசாரக் குறைவான செயலைச் செய்கிறோமே எனப் பதட்டத்தில் மனம் குறுகுறுத்தது. இதோ... அந்த பக்தைக்கு வழங்க தீர்த்தத்தை எடுத்து விட்டார் காஞ்சிப்பெரியவர். நடந்ததை அவர் பார்க்கவில்லை என்றாலும், சுத்தமில்லை என்று சொல்லி தீர்த்தம் வாங்குவதை தவிர்க்கவும் அப்பெண்ணுக்கு மனமில்லை. தயங்கியபடி நீட்டினாள்.
எல்லாம் அறிந்த காஞ்சிப்பெரியவர் தீர்த்தம் கொடுத்து, 'தீர்த்தத்தால் உள்ளங்கைகளை துடைத்துக் கொண்டு கீழே விட்டு விடு'' என்றார் சிரித்தபடி. அவளும் சிரத்தையுடன் செய்தாள்.
'இப்போது கை சுத்தமாகி விட்டதே...இந்தா...! தீர்த்தம் வாங்கிக் கொள்'' என்றார்.
அவள் கைகளைக் குவித்தபடி பெற்றுக் கொண்டாள்.
தலைமுடி அவிழ்ந்ததையோ மறுபடி அவள் முடிச்சிட்டதையோ வரிசையில் நின்ற சிலரைத் தவிர மற்றவர்கள் பார்க்கவில்லை. மனதில் எழுந்த தயக்கத்தை யாரிடமும் சொல்லவும் இல்லை. ஆனால் அவளின் குறுகுறுப்பை எப்படி அறிந்தார் அவர்? என எண்ணியபடி புறப்பட்டாள் அந்த பக்தை. நடமாடும் அந்த தெய்வத்திற்கு மட்டுமே அது தெரியும்.