ADDED : ஜூன் 09, 2019 10:06 AM

அந்தக் காலத்தில் இருந்தவர் பிரபல வீணை வித்வான் வைத்தியநாத ஐயர். இவருக்கு சபேசன், கிருஷ்ணமூர்த்தி என்று இரு மகன்கள். மூத்தவர் சபேசன் தந்தையைப் போலவே, வீணையில் தேர்ச்சி பெற்றிருந்தார். இனிய குரலால் பாடவும் செய்வார்.
ஒருநாள் தந்தையுடன் காஞ்சி மடத்திற்கு வந்த சபேசன், காஞ்சிப்பெரியவர் முன்னிலையில் வீணை இசைத்தபடி, பாடத் தொடங்கினார். அவர் பாடிய காமாட்சியம்மன் குறித்த பாடல், அங்கிருந்தோரின் மனதை நெகிழச் செய்தது.
வைத்தியநாத ஐயரும் தன் மகனின் பாட்டில் மனம் தோய்ந்தார். ஒருகட்டத்தில் சுவாமிகளின் முன்னிலையில் இருப்பதையும் மறந்தவராக, 'பலே! அருமை!' என வாய்விட்டு பாராட்டினார். அனைவரும் அமைதி காத்தனர்.
அப்போது மகாசுவாமிகள் குறுக்கிட்டு, ''உங்கள் மகனின் திறமையை பாராட்டுகிறீர்கள்; நல்ல விஷயம் தான். ஆனால் இங்குள்ளவர்கள் என்ன நினைப்பார்கள் தெரியுமா? 'மகனைப் பற்றிய பெருமையைப் பார் இவருக்கு' என மனதிற்குள் சிரிப்பார்கள். பலரும் அறிய சபையில் பெற்றோர் பிள்ளைகளைப் பாராட்டக் கூடாது. தனிப்பட்ட முறையில் மகனை ஊக்கப்படுத்தலாமே தவிர புகழ்வது கூடாது. ஊரிலுள்ள மற்றவர்கள் தான் உங்களின் காதுபட புகழ வேண்டும்.
'தம்மின் தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இனிது' என்கிறாரே திருவள்ளுவர்? சபையிலுள்ள அனைவருக்கும் உங்கள் மகனின் ஆற்றல் இனியதாகத் தோன்ற வேண்டும். அப்போது, 'இவன் தந்தை மகனைப் பெற என்ன தவம் செய்தாரோ? என ஊரார் பேசுவர். 'மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை எந்நோற்றான் கொல் எனும் சொல்' என்றும் வள்ளுவர் சொல்கிறாரே? ஊரார் புகழ்ந்தால் அதுவே மகனுக்கும் பெருமை; உங்களுக்கும் பெருமை''
சுவாமிகளின் வழிகாட்டுதலை ஏற்று உடனடியாக நடப்பதாக வைத்தியநாதர் உறுதியளித்தார்.
தொடர்புக்கு: thiruppurkrishnan@hotmail.com
திருப்பூர் கிருஷ்ணன்