ADDED : ஜூன் 27, 2019 10:39 AM

உத்தரபிரதேசத்திலுள்ள கன்னாஜ் என்னும் பகுதியை விஜயசந்திரன் என்னும் மன்னர் ஆண்டார்.
அவரது அவைப்புலவரான ஹீரன், அண்டை நாட்டுப் புலவருடன் நடந்த போட்டியில் தோற்றதால் தன் உயிரை மாய்க்க முடிவெடுத்தார். அதற்கு முன்பாக தன் மனைவி மாமல்லதேவியை அழைத்து ஒரு வேண்டுகோள் விடுத்தார். ''தேவி! கல்வித்தெய்வமான சரஸ்வதியின் அருள் தரும் சிந்தாமணி மந்திரத்தை நமது மகன் ஹர்ஷனுக்கு 12 ஆண்டுகள் உபதேசம் செய். இதை விட, உடனடி பலன் வேண்டுமென்றால், இரவு முழுவதும் பிணத்தின் மீது மகனை கிடத்தி உபதேசம் செய்'' என்றார். மாமல்லதேவியும் சம்மதித்தாள். பின்னர் உயிரை மாய்த்தார். ஒரு நல்லநாளில் மாமல்லதேவி தன் மடியின் மீது மகனைக் கிடத்தி மந்திரத்தை உபதேசித்து விட்டு, தன் தலையைத் தானே துண்டித்தாள்.
இருளில் இருந்த குழந்தையும் உண்மை தெரியாமல் தாயின் பிணம் மீது படுத்தபடி மந்திரம் ஜபித்தது. மந்திர பலத்தால் சரஸ்வதி காட்சியளித்தாள். இருள் மறைந்து பிரகாசம் வெளிப்பட்டது. இறந்த தாயைக் கண்ட ஹர்ஷன், சரஸ்வதியிடம் முறையிட அம்மாவும் உயிர் பெற்றாள். ஹர்ஷனுக்கும் சிறந்த புலவராக விளங்கும் வரத்தை அளித்தாள்.