sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

பச்சைப்புடவைக்காரி (49)

/

பச்சைப்புடவைக்காரி (49)

பச்சைப்புடவைக்காரி (49)

பச்சைப்புடவைக்காரி (49)


ADDED : ஏப் 13, 2019 10:03 AM

Google News

ADDED : ஏப் 13, 2019 10:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாயா? தர்மமா?

மாலை மணி ஐந்தரை இருக்கும். என் அலைபேசி சிணுங்கியது. அழைத்தவர் குமார். வருமானவரித்துறை உதவி ஆணையர். வயது முப்பதிற்குள் இருக்கும். நேர்மையான அரசு அதிகாரி.

“ஆடிட்டர் சார் உங்கள அவசரமா பார்க்கணுமே! உங்க ஆபீசுக்கு வரலாமா?”

“தாராளமா.”

“நான் வர்ற போது ஆபீஸ்ல யாரும் இல்லாமப் பாத்துக்கங்க. நாம சந்திப்பதை தப்பா யாரும் பேசிடக் கூடாது.”

“ஏழு மணிக்கு வாங்க; யாரும் இருக்க மாட்டாங்க.”

சரியான நேரத்திற்கு வந்தார் அவர்.

“நேரடியா விஷயத்துக்கு வந்துடறேன் சார். எனக்குப் பத்து வயசு இருக்கும் போது எங்கப்பா இறந்துட்டாரு. எங்கம்மாவுக்கு அப்போ வயது 32. அம்மாவின் தியாகத்தால தான் இன்னிக்கு நல்ல பதவியில இருக்கேன்.”

இப்படி மகன் கிடைக்கக் கொடுத்து வைத்திருக்கணுமே!

“நான் ஒரு பெண்ணை விரும்பறேன். அவ ஒரு ஐ.பி.எஸ்.,ஆபீசர். அவளும் என்னை விரும்பறா.”

“வாழ்த்துக்கள். அம்மா சம்மதிச்சிட்டாங்களா?”

“எங்க காதலுக்கு ஜாதி, மதம் எல்லாம் பிரச்னை இல்ல. வேற பிரச்னை கெளம்பியிருக்கு.”

“சொல்லுங்க.”

“எங்கம்மா வரதட்சணையை எதிர்பாக்கறாங்க. காரு, நகை, ரொக்கம் தடபுடலான கல்யாணம் அப்படின்னு...''

“பொண்ணு வீட்டுல எப்படி? வசதியானவங்களா?”

“வசதிக்கு குறைவில்ல. ஆடம்பரமா திருமணம் நடத்த இருவருக்கும் இஷ்டமில்லை. வரதட்சணை கேக்கறது தப்பில்லையா? சட்டப்படியும் தப்பு; தர்மப்படியும் தப்பு.”

உயர்பதவியில் உள்ள ஒருவர் இப்படி சொல்லும் போது... இளைஞர்களின் மீது அபார நம்பிக்கை எனக்கு வந்தது.

“கடந்த ஒரு மாசமா பிரச்னை ஓடிக்கிட்டு இருக்கு. நான் வரதட்சணை கேக்கக் கூடாதுன்னு சொல்றேன். 'கல்யாணத்துக்கு முன்னாலயே அவ சொக்குப்பொடி போட்டுட்டாளா' இப்படி கேக்கறாங்க அம்மா! 'என்னை மீறிக் கல்யாணம் பண்ணிக்கிட்டா நீ என் மகனும் இல்லை; நான் உன் அம்மாவும் இல்லை'ன்னு சொல்றாங்க.”

இதைச் சொல்லும் போது அவரின் கண்கள் குளமானது. மேலும் பேச்சை தொடர்ந்தார்.

“எனக்குக் கொஞ்சம் அவகாசம் கொடுங்க'' என்று சொல்லி அவரை அனுப்பினேன்.

மறுநாள் சாலையில் சென்ற போது பெண் ஒருத்தி, “என்னுடன் வா. அந்த அதிகாரியின் பிரச்னை பற்றிப் பேச வேண்டியிருக்கிறது.” என காதில் கிசுகிசுத்தாள்.

ஆகா! பச்சைப்புடவைக்காரி! அவளை வணங்கினேன்.

''தாயே ஒரே குழப்பமாக இருக்கிறது. ஒரு பக்கம் மகனை வளர்க்க தியாகம் செய்த தாய். மறுபக்கம் வரதட்சணை வாங்கக் கூடாது என சொல்லும் இளைஞரின் நேர்மை!”

“சரி அந்த இளைஞனுக்கு என்ன சொல்லப் போகிறாய்?”

“வரதட்சணை வாங்குவது பாவம் என அவனது தாயிடம் விளக்கச் சொல்வேன். தாயும் மனம் மாறுவாள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.”

“மாறாவிட்டால்?”

“அப்புறம் என்ன செய்வது? கணவர் இறந்தபின் உயிரைக் கொடுத்து மகனை வளர்த்திருக்கிறாள். விட்டுக் கொடுக்க முடியுமா? தாயின் சொல்லைத் தட்டாமல் கேட்க வேண்டியதுதான். பெண் வீட்டாரும் பணக்காரர்கள் தானே! வரதட்சணை கொடுப்பதில் கஷ்டம் இல்லையே!”

“அது இரண்டாம் பட்சம். தாய் சொல்வதற்காக வரதட்சணை கேட்டால் அது சரியா?”

“சரியம்மா...அதற்காக தாயை விட்டுக் கொடுக்க முடியுமா?”

“தாய்மை என்னும் நிலை புனிதமானது. உயிராக அதை மதிக்க வேண்டும். விபரம் தெரியாத வயதில் தாய் எதைச் சொன்னாலும் குழந்தைகள் செய்யலாம். ஆனால் விபரம் தெரிந்த பிறகும் தாய் தவறு செய்யும் போது தட்டிக் கேட்க வேண்டும். தாயை விட தர்மம் பெரிது. குழந்தைகளை மட்டும் காப்பவள் தாய். நம் தலைமுறையையே காப்பது தர்மம். இந்த உலகத்தை காக்கும் சக்தி அதற்கு இருக்கிறது”

நான் என்னுடைய வாதங்களை வைக்கத் தவறவில்லை.

“ தாயே! ராமாயணத்தில் ராவணன் தவறு செய்தான். அவனது தம்பி விபீஷணன் தட்டிக் கேட்டான். ஆனால் இன்னொரு தம்பி கும்பகர்ணனோ கடைசிவரை அண்ணனுக்காக போரிட்டு இறந்தான். இருவரையுமே காவியம் சிலாகித்துப் பேசுகிறதே!”

“ஓகோ... என்னிடமே மேற்கோள் காட்டுகிறாயா? நான் சொல்லட்டுமா? காட்டுக்குப் போ என்ற சிற்றன்னை கைகேயி கட்டளையிட்டதைச் செயல்படுத்திய ராமரைக் கொண்டாடுகிறோம். அதே நேரம் தாய் சொல்லை மீறி கிடைத்த பதவியை ராமனுக்கு கொடுத்த பரதனை இன்னும் அதிகம் கொண்டாடுகிறோமே. தாய் சொன்னது தவறு என்று தட்டிக் கேட்ட பரதனை “ஆயிரம் ராமன்கள் உனக்குச் சமமாக மாட்டார்கள்” என வேடன் குகன் சொன்னதைக் கேட்டு சிலிர்க்கிறோமே? அதற்கு என்ன சொல்கிறாய்?”

“பாவம் அந்த அதிகாரி! காதல் கைகூடும் நேரத்தில் குழப்பம் ஏற்பட்டு விட்டதே? அவருக்கு வழிகாட்ட வேண்டும் தாயே”

“அவனை பக்குவமாகப் பேசி பார்க்கச் சொல். ஆனால் தாய் மசிய மாட்டாள். அவனது ஜாதகம், அந்தப் பெண்ணின் ஜாதகத்தை ஒரு பெரிய ஜோதிடரிடம் காண்பிக்கச் செல்வாள். என் பக்தரான அந்த ஜோதிடர், 'வரதட்சணை வாங்கினால் இளைஞரின் உயிருக்கு ஆபத்து 'என்று சொல்வார். நான் தான் அவரை அப்படிச் சொல்ல வைப்பேன். அதன் பின் அரை மனதுடன் சம்மதிப்பாள் அந்த தாய். ஆனால் காலப்போக்கில் அவளின் மனம் திருந்தும். குடும்பத்தில் வாரிசு வந்த பின் அவளின் மனநிலை மாறும். அந்த இளைஞன் எதிர்காலத்தில் அமோகமாக வாழ்வான்” என்றாள்.

மீண்டும் பச்சைப்புடவைக்காரியை வணங்கினேன்.

“தாயை விட தர்மம் பெரிது என்பதை எந்த அளவுக்கு நீ உள்வாங்கினாய்?”

“தங்கள் சித்தம் தாயே!”

“அவனுக்குச் சொன்ன வழிகாட்டுதல் உனக்கும் தான். நான் ஏதாவது அநியாயம் செய்யச் சொன்னால்?”

“உடனே செய்வேன் தாயே!”

“என்ன புரிந்து கொண்டாய் நீ? தர்மத்திற்கு விரோதமாக நடந்தால் நரகத்தில் வீழ்வாயே”

“வீழ்ந்து விட்டுப் போகிறேன் தாயே. நான் தர்மத்திற்கு எதிராக ஒருபோதும் நடக்கவில்லையே. பச்சைப்புடவைக்காரிக்கு அடிமையாக வாழ்வதே என் வாழ்க்கை தர்மம். தங்களின் அடிமை என்ற நிலை ஒன்றே எனக்குப் போதும்.”

அன்னை கலகலவென சிரித்தபடி மறைந்தாள். நான் அழுதேன்.

இன்னும் வருவாள்

தொடர்புக்கு: varalotti@gmail.com

வரலொட்டி ரெங்கசாமி






      Dinamalar
      Follow us