
பொன்மழை பெய்யச் செய்த அம்பிகை ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் கோயில் கொண்டிருக்கிறாள். காவல் தெய்வமான இவளுக்கு அபிேஷகம் செய்து அரளிப்பூ மாலை சாத்தினால் செல்வம் பெருகும்.
கீலா என்னும் அசுரன் துர்கா தேவியிடம், 'தாயே! நீ என் உள்ளத்தில் வாசம் செய்ய வேண்டும்' என வேண்டினான். அவனிடம் தேவியும், 'கிருஷ்ணா நதிக்கரையில் மலையாக உயர்ந்து நில். மகிஷாசுர வதம் முடித்ததும் உன் மீது குடியிருக்கிறேன்' என அருள்புரிந்தாள். அதன்படியே அசுரனும் மலையாக மாறினான். வதம் முடித்த அம்பிகையும் மகிஷாசுரமர்த்தினி என்னும் பெயருடன் இங்கிருக்கிறாள். பொன்மழை பொழியச் செய்து இத்தலத்தை செல்வச் செழிப்பை ஏற்படுத்தவே 'கனக துர்கா' எனப் பெயர் பெற்றாள். அர்ஜுனன் இங்கு தவம் செய்து சிவபெருமானிடம் பாசுபத அஸ்திரம் பெற்றான்.
சக்தி பீடங்களில் ஒன்றான இங்கு அம்பிகையின் உக்கிரத்தைப் போக்க ஆதிசங்கரர் ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்தார். இங்குள்ள சுவாமி துர்கா மல்லேஸ்வரர் எனப்படுகிறார். சுற்றுச்சுவரில் பாண்டிய மன்னர்களின் மீன் சின்னம் உள்ளது. சன்னதியின் நுழைவு வாசலில் சாகம்பரி, அவதுாத சுவாமிகள் சிலைகள் உள்ளன. விநாயகர், முருகன், நடராஜர், சிவகாமி சன்னதிகள் உள்ளன.
எப்படி செல்வது: விஜயவாடா ரயில்வே ஸ்டேஷனில் இருந்து 3 கி.மீ., மலைக்கோயிலுக்குச் செல்ல 260 படிக்கட்டுகள் ஏற வேண்டும்.
விசேஷ நாள்: ஆவணி திருவோணம், நவராத்திரி, மகாசிவராத்திரி.
நேரம் : அதிகாலை 4:00 - 9:00 மணி
தொடர்புக்கு: 0866 - 242 3600, 242 5744
அருகிலுள்ள கோயில்: தெனாலி பஞ்சமுக ஆஞ்சநேயர் 38 கி.மீ.,(பயம் தீர...)
நேரம்: காலை 6:00 - 12:00 மணி; மாலை 6:00 - 9:00 மணி
தொடர்புக்கு: 94408 53850