
''வேதம் தழைத்தால் தான் உலகம் நன்றாக இருக்கும். ஆத்மாவும் க்ஷேமம் அடையும். மடங்கள் அல்லது ஸ்தாபனங்கள் மட்டுமே இந்தக் கடமையை முழுமையாகச் செய்ய முடியாது. ஆர்வத்தோடு அனைவரும் சேர்ந்து இந்த பாரதமண்ணை வேதபூமியாக்க பாடுபட வேண்டும்'' என்கிறார் காஞ்சி மஹாபெரியவர்.
வேதம் என்னும் விருட்சம் விழுது விட்டு வளர்ந்த மண் இது என்பதை 'வேதம் நிறைந்த தமிழ்நாடு' எனப் பாடினார் மகாகவி பாரதியார்.
சங்க இலக்கியமான திருமுருகாற்றுப்படையில், 'முருகனின் முகங்களில் ஒன்று, வேதமுறைப்படி நடத்தும் அந்தணர்களின் யாகங்களை பாதுகாக்கிறது' என்கிறது.
ஹிந்து மதம் என்னும் விருட்சத்திற்கு வேராக இருப்பது வேதம். தியானம், ஞானம், பக்தி, கோயில் இவையெல்லாம் நம் கண்ணுக்குத் தெரிகின்ற கிளை, பூ, காய், பழம் போலாகும். வேதம் என்னும் வேரை பாதுகாத்தால் தான் ஹிந்து என்னும் மரம் செழிப்பாக வளரும்.
வேதம் கற்பது சாதாரண விஷயமல்ல. குழந்தை பருவம் முதலே எதிர்பார்ப்பு இல்லாமல் படிக்கும் அவர்களின் வாழ்க்கையை சிந்தியுங்கள்.
தினமும் 2 மணி நேரம் பாடம். பின் 6 மணி நேரம் சந்தஸ் சொல்ல வேண்டும். படிப்பு 8 முதல் 12 ஆண்டுகள். படிப்பது மிக கடினம். கண்டிப்பும் அதிகம். காலை உணவு பழைய சாதம் அல்லது உப்புமா, மதியம் ஒரு காயுடன் சாப்பாடு.
இரவில் உப்புமா. விரும்பிய உடைகளை உடுத்த முடியாது. அதுவும் மாணவனே துவைக்க வேண்டும்.
விளையாடாமல், நீண்ட நேரம் துாங்காமல் அதிகாலையிலேயே எழுந்து பயிற்சியில் ஈடுபட வேண்டும். குடும்ப உறவுகளோ, டிவி, சினிமா என பொழுதுபோக்கோ கிடையாது. கோடையில் 15 நாள் விடுமுறை. அப்போதும் அனுஷ்டானம் (வேத பயிற்சி).
இளம் வயதில் வேதத்தை தவிர வேறு சிந்தனை கிடையாது என்றிருக்கும் இவர்களின் தவவாழ்வை எண்ணிப் பாருங்கள்.
எழுத்து வடிவில் இல்லாத வேதத்தை பதம், கிரமம், ஜடை, கனம் என பிரித்து அத்யயனம் (மனப்பாடம்) செய்யும் முறையிலும், கட்டுக்கோப்பாக ஓதும் முறையிலும் ஒரு எழுத்து கூட கூட்டவோ குறைக்கவோ கூடாது. அதனால் மிக கவனத்துடன் வேதத்தை கற்கின்றனர். எதற்காக இத்தனை கஷ்டம் என்றால் உலக நன்மைக்காக...
இந்த வேத விருட்சம் நன்கு வளர அனைவரும் தண்ணீர் ஊற்றுவோம். உரமிடுவோம். தாய்நாட்டுக்காக தன் மகனைத் தருவது போல வேதத்துக்காக தன் குழந்தையைத் தருவதும் தியாகமே.
நாட்டு எல்லையில் இருக்கும் ராணுவவீரன் எதிரியிடம் இருந்து மக்களைக் காப்பது போல வேதம் கற்றவன் கெட்ட சக்திகளிடம் இருந்து மக்களைக் காக்கிறான்.
பணம் இருந்தால் என்ன படிப்பு வேண்டுமானாலும் படிக்கலாம். ஆனால் வேதம் படித்தால் புண்ணியம் சேரும்.