sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

தலவிருட்சங்கள் - 12

/

தலவிருட்சங்கள் - 12

தலவிருட்சங்கள் - 12

தலவிருட்சங்கள் - 12


ADDED : ஆக 03, 2023 03:40 PM

Google News

ADDED : ஆக 03, 2023 03:40 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேத்தாகுடி காமாட்சியம்மன் கோயில் - தும்பி

நாகை மாவட்டம் வேதாரண்யத்திற்கு இலங்கை மக்கள் வந்து செல்வர். இங்கு 12 ஏக்கர் பரப்பில் மூலிகைகள் நிறைந்த காட்டில் சக்தி வாய்ந்த அம்மனாக காமாட்சியம்மன் குடியிருக்கிறார். இலங்கையில் வாழும் தமிழர்களும் இந்த காமாட்சி அம்மனை தங்கள் நாட்டுக்கு பிடிமண் எடுத்துச் சென்று தற்போது வழிபடுகின்றனர்.

இங்குள்ள தெய்வச் சிலைகள் அனைத்தையும் நிர்மாணித்து காமாட்சி அம்மனை வழிபட்டு வந்த பூஜாரியின் பெயரால் இக்கோயில் 'குட்டியாண்டி கோயில்' என்றும் அழைக்கப்படுகிறது. தெய்வங்கபெருமாள் கோயில், காமாட்சியம்மன் என்ற குட்டியாண்டி கோயில், தேத்தாகுடி காமாட்சியம்மன் கோயில் என பல பெயர்களில் அழைக்கின்றனர்.

தேத்தாகுடி கிராமத்தைச் சுற்றியுள்ள மக்கள் வழிபடுகின்றனர். ஜாதி வேறுபாடு இன்றி பலரும் இந்த அம்மனை குலதெய்வமாக வழிபடுகின்றனர். ஆடி பவுர்ணமி அன்று திருவிழா சிறப்பாக நடக்கும். இங்குள்ள தெப்பம் மாங்குளத் தீர்த்தம். விருப்பம் நிறைவேற இந்த தெப்பத்தில் நீராடி காமாட்சியம்மனை வழிபடுகின்றனர்.

கோபுர வாசலில் நுழைந்ததும் மகாகணபதி, பைரவர், சுப்பிரமணியர், ஆஞ்சநேயர், காமாட்சியம்மன், அருவ வடிவில் தெய்வங்க பெருமாள், உத்தண்ட ராயர், பெத்தபெருமாள் சன்னதிகள் உள்ளன. அடுத்ததாக நாககன்னியம்மனும், அசகண்ட வீரர், துாண்டிகாரசாமி, முனீஸ்வரர், வழியூரான் என்னும் காவல் தெய்வம், பெரியாச்சி என்னும் காடேறி அம்மன், காளியம்மன் என பன்னிரண்டு தெய்வங்கள் கடிகார வடிவில் கோயிலுக்குள் அமர்ந்திருப்பது சிறப்பு. காவல் தெய்வமான முனீஸ்வரர் இப்பகுதி மக்களால் பெரிதும் வழிபடப்படுகிறார். அருவமாக உள்ள தெய்வங்க பெருமாளுக்கு சிலை கிடையாது.

இக்கோயிலின் தலவிருட்சம் தும்பிக்காய் மரம். இது காய்க்காத ஆண் மரம். பொற்கொல்லர்கள் அழுக்கு நீக்கியாக பயன்படுத்தும் பூந்திக்காய் மரம், வில்வமரம், இலுப்பை மரம் போன்ற மூலிகை மரங்கள் நிறைந்திருக்கும் குறுங்காடு பச்சைப்பசேல் என இங்கு காட்சியளிக்கிறது.

டயோஸ்பைரிஸ் பெரிகிரைனா என்னும் தாவரவியல் பெயர் கொண்ட தும்பி மரம் எபினேசியே குடும்பத்தைச் சேர்ந்தது. தும்பி, தும்பிலி, பாணிக்காய், பனிச்சக் காய், சாதுகமா செடி, தும்பளிக் காய் செடி என்னும் பெயர்கள் இதற்குண்டு.

துவர்ப்புச் சுவை கொண்ட இந்த மரம் ரத்தப்போக்கு, பேதி, வாய்புண்களை குணப்படுத்தும். இதன் பட்டையை இடித்து நீரில் ஊற வைத்து, வடிகட்டி 30 முதல் 60 மில்லி அளவு குடித்து வந்தால் காய்ச்சல் தீரும். காயை இடித்து சாறு எடுத்து 15 முதல் 20 மில்லி கொடுக்க ரத்தபேதி, செரியாமையால் ஏற்படும் பேதி மறையும். பழங்களை ஊற வைத்து பின் நீரில் கொதிக்க வைத்து கஷாயமாக சாப்பிட செரிமானம் அதிகரிக்கும். இந்த தண்ணீரில் வாய் கொப்பளித்தால் நாக்கு, வாய், ஈறுகளில் உள்ள புண்கள் ஆறும். சிறுநீர் பாதையில் ஏற்படும் தொற்றை நீக்கும்.

சித்தர் போகர் பாடிய பாடல்

தும்பியுட பெயர் தனையே துதிகாகக் கேளு

தும்பரிசி திசாரகந் தானுமாகு

மிம்பரி மிறஷ்டபந் தனமுமாகும்

விபூறசனி விகரணிவிப் பிரணியாகுந்

தம்பரி சாரணி ரோபஞ்சனியாந்

தண்மையாம் வாதபித்த சமனியாகும்

அம்பரி யரிதாரவி பூதிச்சியாகும்

ஆண்மையாந் தும்பியுட அதிகமாமே

தும்பரிசி, திசாரகந்தன், இம்பரி இறஷ்டபந்தனம், விபூறசனி, விகரணி, விப்பிரணி, குந்தம், பரிசாரணி, ரோபஞ்சனி, வாதபித்தசமனி, அம்பரி, அரிதாரவி, பூதிச்சி ஆகியன தும்பியின் வேறு பெயர்களாக போகர் குறிப்பிடுகிறார்.

--தொடரும்

எப்படி செல்வது: வேதாரண்யம்-திருத்துறைப்பூண்டி சாலையில் கரியாபட்டினம் வழியில் மண்டபக்குளத்தில் இருந்து 2 கி.மீ.,

நேரம்: காலை 8:00 - மதியம் 1:00 மணி

தொடர்புக்கு: 80982 74299, 99431 94476

ஜெ.ஜெயவெங்கடேஷ்

98421 67567

jeyavenkateshdrs@gmail.com






      Dinamalar
      Follow us