sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

தலவிருட்சங்கள் - 13

/

தலவிருட்சங்கள் - 13

தலவிருட்சங்கள் - 13

தலவிருட்சங்கள் - 13


ADDED : ஆக 04, 2023 11:59 AM

Google News

ADDED : ஆக 04, 2023 11:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கழுகுமலை கழுகாசலமூர்த்தி - நாவல் மரம்

துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இருந்து சங்கரன் கோவில் செல்லும் வழியில் உள்ள திருத்தலம் கழுகுமலை. இதன் பழைய பெயர் அரைமலை. இதற்கு குறுகுமலை, புவனகிரி, கஜமுக பர்வதம், ஜம்பாதி க்ஷேத்திரம் என்றும் பெயர்கள் உண்டு.

கழுகாசல மூர்த்தி என்னும் பெயரில் ஒரு முகம், ஆறு கைகளுடன் முருகப்பெருமான் இங்கு குடிகொண்டிருக்கிறார். கைகளில் கத்தி, கேடயம், வஜ்ராயுதம், குலிசாயுதம், வேல் ஆகிய ஆயுதங்களுடன் மயிலின் மீது சம்ஹார கோலத்தில் காட்சி தருகிறார்.

சீதையைக் கடத்திச் சென்ற ராவணனைத் தடுக்க முயன்றார் கழுகு அரசனான ஜடாயு. அவரது சிறகுகளை வாளால் வெட்டி வீழத்தினான் ராவணன்.

தனக்காக உயிர் நீத்த ஜடாயுவைத் தன் தந்தையாக கருதி ஈமக்கடன்களைச் செய்தார் ராமர். இதை அனுமன் மூலம் ஜடாயுவின் தம்பியான ஜம்பாதி கேள்விப்பட்டார். தன் சகோதரருக்கு ஈமக்கிரியை செய்யாத பாவத்திற்கு ஆளானதை எண்ணி வருந்தினார். கஜமுகபர்வதம் என்னும் கழுகுமலை தீர்த்தத்தில் நீராடி, அங்குள்ள முருகனை வழிபட்டால் பாவம் விலகும் என தெரிவித்தார் ராமர். அவரும் முருகப்பெருமானை வழிபட்டு நற்கதி பெற்றார். ஜம்பாதி என்னும் கழுகு வழிபட்டதால் கழுகுமலை என இத்தலம் பெயர் பெற்றது. முருகன் மேற்கும், வள்ளி தெற்கும், தெய்வானை வடக்கும், ஜம்புலிங்கேஸ்வரர் கிழக்கும், அகிலாண்டேஸ்வரி மேற்கும் நோக்கியபடி இங்குள்ளனர். வேறெங்கும் இல்லாத அமைப்பு இது.

கருவறை, அர்த்த மண்டபம் என 300 அடி உயரத்தில் மலையை குடைந்து செய்யப்பட்ட குடவரைக் கோயில் இது. 8ம் நுாற்றாண்டைச் சேர்ந்த இக்கோயிலில் நடைபெறும் கந்தசஷ்டி விழா சிறப்பானது. ஜம்புலிங்கேஸ்வரரான சிவபெருமானும், அகிலாண்டேஸ்வரியும் தனித்தனி சன்னதியில் உள்ளனர். அர்த்த ஜாம பூஜை முடிந்த பிறகு முதலில் முருகனுக்கும், பின்னர் சிவனுக்கும் பள்ளியறை பூஜை நடக்கும். மறுநாள் முதலில் சிவனுக்கும் பிறகு முருகனுக்கும் காலை பூஜை நடக்கும். கோயிலை சுற்றி செதுக்கியுள்ள சிற்பங்கள் மகாராஷ்டிரா மாநிலம் எல்லோரா கயிலைநாதர் கோயிலைப் போல் இருப்பதால் 'தென்னக எல்லோரா' என அழைக்கப்படுகிறது.

அருணகிரிநாதர் திருப்புகழ், அண்ணாமலை ரெட்டியாரின் காவடி சிந்து, எட்டயபுரம் காளிபுலவர், சிதம்பரம் கவிராயரின் பிள்ளைத்தமிழ், முத்துசாமி தீட்சிதரின் கீர்த்தனையும் கோயிலின் பெருமைகளை விளக்குகின்றன. கச்சியப்பர் சிவாச்சாரியார் ராஜயோகமாக முருகன் வீற்றிருக்கும் திருத்தலம் கழுகுமலை எனப் பாராட்டுகிறார்.

ஜம்புலிங்கேஸ்வரரின் முன்புறம் ஜம்பு என்னும் நாவல் மரம் தலவிருட்சமாக உள்ளது. சிஜியம் குமினி (Syzygium cumini) என்னும் தாவரவியல் பெயர் கொண்ட மிருட்டேசியே குடும்பத்தை சார்ந்தது.

சித்தர் திருமூலர் பாடிய பாடல்

போகின்ற பொய்யும் புகுகின்ற பொய்வித்தும்

கூகின்ற நாவலின் கூழைத் தருங்கனி

ஆநின்ற வைங்கூழ் அவையுண்ணும் ஐவரும்

வேகின்ற கூரை விருத்திபெற் றாரே.

நாவல் மரத்தின் காயால் எந்த பலனும் இல்லை. ஆனால் கனிந்த பழம் உடலுக்கு நலம் தரும். நம் உடம்பில் உள்ள வாயுவைக் கட்டுப்படுத்தி மூச்சுப் பயிற்சியை கடைப்பிடிப்பதன் மூலம் பயன் தராத இந்திரியங்களை நம் உடலுக்கு பயன் தரும்படி மாற்றலாம் என்பதை நாவல் பழத்தை உடலுடன் ஒப்பிட்டு பாடியுள்ளார் திருமூலர்.

அகத்தியர் பாடிய பாடல்

சேர்ந்ததொரு நீரிழிவுஞ் சேருமோ -

நாந்தலொடு

வாய்வுங் கடுப்பும் வருங்கொதிப்புந்

தாகமும்போம்

துாயநா வற்பழத்தால் சொல்.

சம்புவின் கனியதனள் சாப்பிட படியு நோய்க்

கும்பெலா மாறிடுங் கூச்சமில் லாமலே.

நாவல் பட்டையை கஷாயம் செய்து சாப்பிட ரத்தப்போக்கு, வயிற்றுவலி, வாய்ப்புண், சர்க்கரை நோய் நீங்கும். எட்டிக்காயால் ஏற்படும் விஷம் தீர நாவல் பட்டையை கஷாயம் செய்து சாப்பிடலாம்.

நாவறட்சி, அதிக தாகம் தீர நாவல் பழத்தின் தோலை சாப்பிட்டு வரலாம்.

நாவல் பழத்தை தொடர்ந்து சாப்பிட சர்க்கரை நோய், உடல் சூடு தணியும். பஞ்ச மூலிகையில் ஒன்றாக நாவல் பழம் உள்ளது. இந்த மரத்தை தலவிருட்சமாகக் கொண்ட கழுகுமலை முருகனை வழிபட்டு நலமாக வாழ்வோம்.

-தொடரும்

எப்படி செல்வது: கோவில்பட்டியிலிருந்து 22 கி.மீ.,

நேரம்: காலை 6:00 - 11:00 மணி; மாலை 4:00 - 8:00 மணி

தொடர்புக்கு: 99526 78360, 90479 81091

ஜெ.ஜெயவெங்கடேஷ்

98421 67567

jeyavenkateshdrs@gmail.com






      Dinamalar
      Follow us