
சிக்கல் சிங்கார வேலவர் - மல்லிகை
நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள சிக்கல் என்னும் ஊரில் உள்ளது நவநீதேஸ்வரர் என்ற வன்னியப்பெருமான் கோயில். இலக்கியங்களில் 'சிக்கர்பள்ளி' என இத்தலம் குறிக்கப்பட்டுள்ளது.
2000 ஆண்டுகள் பழமையான இக்கோயிலில் சிவன், மகாவிஷ்ணு, முருகன், அனுமனுக்கு சன்னதிகள் உள்ளன. சைவம், வைணவத்தை இணைக்கும் விதத்தில் சன்னதிகள் இருப்பது சிறப்பு.
விண்ணுலகத்தில் இருந்த காமதேனு, ஒருமுறை பசி தாங்காமல் மாமிசத்தை சாப்பிட்டது. இதையறிந்து காமதேனுவை பூலோகம் செல்லுமாறு சிவபெருமான் ஆணையிட்டார். மல்லிகாரண்யம் என்னும் இந்த தலத்தை அடைந்தது. சிவபெருமானை மனதில் தியானித்தபடி பாலைச் சுரந்தது. அது குளமாக பெருகி வெண்ணெய்யாக உறைந்தது. இங்கு வந்த வசிஷ்ட மகரிஷி அந்த வெண்ணெய்யைத் திரட்டி சிவலிங்கமாக்கி வழிபட்டார். அந்த சிவனுக்கு 'திருவெண்ணெய் லிங்கேஸ்வரர்' எனப் பெயர் ஏற்பட்டது. இவரது அருளால் காமதேனு நற்கதி பெற்றது. யாரும் பெயர்த்து எடுக்க முடியாதபடி அந்த லிங்கம் நாளடைவில் புதைந்து மண்ணில் சிக்கியதால் 'சிக்கல்' எனப்பட்டது.
வாழ்வில் ஏற்படும் சிக்கல்கள் தீரவும், உடல் நோய்கள் சரியாகவும் இக்கோயிலில் வழிபடுகின்றனர். இங்கு சத்ரு சம்ஹார திரிசதை என்னும் வழிபாடு செய்தால் சிவன், பெருமாள், முருகன், அனுமன் அருளால் சிக்கல், எதிரி பிரச்னைகள் பறந்தோடும். இங்குள்ள முருகனின் திருநாமம் சிங்கார வேலவர். அசுரனான சூரபத்மனை சம்ஹாரம் செய்வதற்காக வேல்நெடுங்கண்ணி அம்மையிடம் வேல் வாங்கும் போது அவரது உடல் எங்கும் வியர்வை சிந்தும். ஐப்பசி மாதம் சுக்ல பஞ்சமியன்று வேல் வாங்கும் விழா நடக்கும். அருணகிரிநாதர் பாடிய திருப்புகழ் பாடல்களில் இத்தலம் இடம் பெற்றுள்ளது.
கோச்செங்கோட் சோழன் கட்டிய இக்கோயிலின் தலவிருட்சம் மல்லிகை. ஜாஸ்மினியம் கிராண்டிபுளோரா என்பது இதன் தாவரவியல் பெயர்.
ஓலியேசியே குடும்பத்தை சார்ந்த இது மருத்துவ குணம் கொண்டது.
போகர் பாடிய பாடல்
மல்லிகையின் பேர்தனையே வழுத்தக்கேளு
மல்லிகா சத்பீருச் சதமயந்தீ
பில்லிகைப்பீர் மோதினிகே வாட்சிசாவாம்
பூபத்திய யீத்தாமத னீரியாகுந்
துல்லிகை சுகந்திரணி யெண்ணெம்போக்கி
துஷ்டமா வீரணஅரி கேந்திரதாரி
முல்லிகை முடிப்பிக்கு முருகுகாந்தி
முயற்சியா மல்லிகையின் பேருமாமே.
மல்லிகைக்கு முருகுகாந்தி, சத்பீறு, சத்மயம், மதனீரி, வீரணஅரி, கேந்திரதாரி என பல பெயர்கள் உண்டு.
அகத்தியர் பாடிய பாடல்
போகமிக உண்டாகும் பொங்குகபங் கட்பிரமை
ஆகவனல் சூனியமும் அண்டுமோ? -
பாகனையாய்!
மன்னு திருவசியம் வாய்க்குஞ்சூ டென்றெவரும்
பன்னுமல்லி கைப்பூவாற் பார்.
சுகபோகத்தை மல்லிகை அதிகரிக்கும். கபம், மனநோயை போக்கும். செய்வினை கோளாறு தீரும். வசியப்படுத்தும் தன்மையும் இதற்குண்டு. இதன் இலையை மென்று விழுங்க வாய்ப்புண் மறையும். எண்ணெய்யில் இலையை காய்ச்சி இதமான சூட்டில் காதில் சொட்டு விட்டால் காதுவலி குணமாகும். இலையை வதக்கி தொண்டையில் ஒத்தடமிட தொண்டை வலி தீரும்.
மல்லிகையில் இருந்து அத்தர் தயாரித்து அபிஷேகம் செய்யவும், உடம்பில் பூசவும் பயன்படுத்துவர். தோல் நோய்கள் விலகும். பூவை அரைத்து பூசினால் மார்பு வீக்கம், மார்பு கட்டி மறையும். பால் கட்டிகள் கரையும். இதன் வேரையும், வசம்புத்துாளையும், எலுமிச்சம்பழச் சாறு விட்டு அரைத்து பற்று போட தோலில் ஏற்பட்ட தழும்புகள், புண்கள் மறையும்.
சிக்கல் சிங்கார வேலர் கோயிலின் தலவிருட்சமான மல்லிகை நோய்கள், எதிரி தொல்லையைப் போக்கும் தன்மை கொண்டது.
எப்படி செல்வது: நாகப்பட்டினத்தில் இருந்து 6 கி.மீ.,
கும்பகோணத்தில் இருந்து 61 கி.மீ.,
நேரம்: அதிகாலை 5:30 - 12:30 மணி; மாலை 4:00 - 9:00 மணி
தொடர்புக்கு: 04365 - 245 350
-தொடரும்
ஜெ.ஜெயவெங்கடேஷ்
98421 67567
jeyavenkateshdrs@gmail.com

