
கோயில்களில் கடவுள் சன்னதிகளுக்கு நேர் எதிராக மூஞ்சுறு, மயில், சிங்கம், கருடன், நந்தி என பிரதிஷ்டை செய்திருப்பர். ஆனால் சிவபெருமானின் வாகனமாகிய நந்தியே கருவறையில் அருள்பாலிக்கும் கோயில் ஒன்றுள்ளது தெரியுமா...
நந்தி என்றால் ஆனந்தம், தர்மம் என பொருள். இவருடைய அனுமதி இல்லாமல் சிவபெருமானை தரிசிக்க முடியாது. நந்தி என்ற வார்த்தையில் 'ஆ' என்ற எழுத்து சேரும் போது ஆநந்தி என்பர். நீயும் ஆனந்தமாக இரு, பிறரையும் ஆனந்தமாக வைத்துக் கொள் என்ற தத்துவத்தை உணர்த்துபவரே நந்தி. பெரியஆனந்தத்தை தரும் இவர் தான் பெங்களூரு பசவன்குடியில் கோயில் கொண்டுள்ளார். பசவன்குடி என்ற சொல்லுக்கு நந்திக்கோயில் என பொருள்.
இக்கோயில் மலையின் மீது அமைந்துள்ளது. சுமார் 50 படிகள் ஏறியவுடன் மிகப்பெரிய ராஜகோபுரம். அதனை தரிசித்து உள்ளே சென்று ஒரு பிரகாரத்தை கடந்தவுடன் கருவறையில் மூலவராக நந்தீஸ்வரர் அருள் பாலிக்கிறார். இவரை வலம் வரும்போது வாலில் கணபதி உருவம் இருப்பதை பார்க்க முடிகிறது. இவரை பிரதிஷ்டை செய்த நாளில் இருந்து வளர்ந்து கொண்டே இருந்ததால் தலைப்பகுதியில் வெள்ளியால் ஆன திரிசூலத்தை பொருத்தியுள்ளனர். இவரை பதினாறு முறை பிரதோஷத்தன்று தரிசிப்பவர்களுக்கு பதினாறு பேறுகளும் சேரும். முன்பு ஒருசமயம் இப்பகுதியில் இருந்த கடலை தோட்டத்தில் புகுந்த இவர் பயிர்களை சேதப்படுத்தியதை தடுப்பதற்காகவும், இவரை சாந்தப்படுத்துவதற் காகவும் இக்கோயில் கட்டப்பட்டுள்ளது.
பெங்களூரு நகரை உருவாக்கிய கெம்பே கவுடாவே இக்கோயிலை திருப்பணி செய்துள்ளார். இதன் அருகே கவிகங்காதேஸ்வரர் என்னும் கோயில் உள்ளது. நந்தியின் சிறப்பினை அறிந்த தமிழகத்தில் காலங்காலமாக அரசர்களின் செங்கோல், ஆதினங்களின் முத்திரைகளில் அமர்ந்த நிலையில் நந்தியின் வடிவத்தை பயன்படுத்துகின்றனர். தற்போது கூட புதிய பார்லிமென்டில் நந்தி முத்திரையுடன் கூடிய செங்கோல் நிறுவப்பட்டுள்ளது. தமிழகத்தில் திருவிடைமருதுார், தஞ்சாவூர், ராமேஸ்வரத்திலும், ஆந்திராவில் இந்துப்பூர் அருகே லேபாட்சியிலும், கர்நாடகாவில் மைசூரு, பேளூரிலும் ஒரே கல்லினால் ஆன நந்தி சிலைகள் உள்ளன.
எப்படி செல்வது: பெங்களூருவிலிருந்து 7 கி.மீ.,
விசேஷ நாள்: கார்த்திகை சோமவாரம் திங்கள்கிழமை, சனிப்பிரதோஷம் சிவராத்திரி
நேரம்: காலை 6:00 - இரவு 8:00 மணி
அருகிலுள்ள தலம்: தொட்டா கணேசர் சன்னதி
நேரம்: காலை 6:00 - இரவு 8:00 மணி

