ADDED : ஜூலை 02, 2023 09:21 AM

கன்னியருக்கு உரிய வயதில் திருமணம் நடக்காவிட்டால் பெற்றோர் படும் வேதனை சொல்லில் அடங்காது. இவர்களுக்கு தீர்வளிக்கும் தலமாக சென்னை குன்றத்துார் உள்ளது. இங்கு குடியிருக்கும் காத்யாயனி அம்மன் தடைகளை தகர்த்து திருமண வரத்தை தருகிறாள். சக்தி கோயில் எனப்படும் இங்கு வருவோருக்கு ஆறு மாதத்தில் திருமணம் நடக்கிறது.
பகவான் கிருஷ்ணருக்கும், ராதாவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. விதிவசத்தால் இவர்களின் திருமணம் நடக்காமல் தாமதித்த போது ராதா ஒருநாள் காத்யாயன முனிவரை சந்தித்தாள். பீஜ மந்திரம் ஜபித்து காத்யாயனி அம்மனை வழிபட்டால் நன்மை கிடைக்கும் என வழிகாட்டினார் முனிவர்.
'தன்னை வழிபடுவோருக்கு ஒரு அயன (6மாதம்) காலத்திற்குள் திருமண வரம் தருபவள்' என்பதால் 'காத்யாயனி' என அம்மன் அழைக்கப்படுகிறாள். பத்ம விமானத்தின் கீழ், கிழக்கு நோக்கி அமர்ந்த கோலத்தில் இருக்கிறாள்.
அம்மன் சிலை சந்திர காந்தக் கல்லால் ஆனது. தோரண கணபதி, மங்கள மாரி, கிருஷ்ண மாரி, நாகராஜர் சன்னதிகளும் இங்குள்ளன.
திருமுறைகள் இயற்றிய நாயன்மார்களின் வரலாறை தொகுத்த குன்றத்துார் சேக்கிழாரின் இல்லத்திற்கு எதிரிலுள்ள பகுதியில் கோயில் உள்ளது. இப்பகுதிக்கு 'திருமுறைக்காடு' என்று பெயர். செவ்வாய், வெள்ளி, சனி, ஞாயிறு, அமாவாசை, பவுர்ணமி நாளில் கன்னியர்கள் வழிபடுவது சிறப்பு. காத்யாயனி சக்தி பூஜை, விருட்ச பரிகார பூஜை, ஜென்ம பத்திரிகை பூஜை என்னும் மூன்றுவித பூஜைகளை பக்தர்கள் இங்கு செய்கின்றனர். இவை முறையே அர்ச்சனை, பின்னைச் செடியில் மஞ்சள் கயிறு கட்டுதல், அம்மன் பாதத்தில் ஜாதகம் வைத்து பிரார்த்தித்தல் ஆகும். ஒவ்வொரு பவுர்ணமியன்றும் மாலையில் நடக்கும் பாலகாத்யாயனி யாகத்தில் குழந்தை வரம் தரும் மூலிகை பிரசாதம் தரப்படுகிறது.
ஸ்லோகம்
தினமும் 16 முறை காத்யாயனி அம்மனின் ஸ்லோகத்தை சொல்லுங்கள்.
ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் காத்யாயனி
மகாமாயே மகாயோகின்யதீஸ்வரி
நந்தகோப சுதம் தேவம் அதிசீக்ரம்
பதிம் மே குருதே நம:
எப்படி செல்வது
* சென்னை கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் இருந்து 21 கி.மீ.,
* சென்னை தாம்பரத்தில் இருந்து 16 கி.மீ.,
* சென்னை பல்லாவரத்தில் இருந்து 8 கி.மீ.,
விசஷே நாள்: விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி
தொடர்புக்கு: 95511 84326
நேரம்: காலை 8:00 - 12:00 மணி; மாலை 5:00 - 8:00 மணி
அருகிலுள்ள தலம்: குன்றத்துார் சுப்பிரமணிய சுவாமி கோயில்
நேரம்: காலை 6:30 - 12:30 மணி; மாலை 4:00 - 8:00 மணி
தொடர்புக்கு: 93828 89430, 044 - 2478 0436

