ADDED : ஜூலை 30, 2012 03:02 PM

சிவன், அம்பாள் சந்நிதிகளுக்கு நடுவில் சங்கரநாராயணர் சந்நிதி உள்ளது. சிவனுக்குரிய வலப்பாகத்தில் தலையில் கங்கை, பிறைச்சந்திரன், அக்னி, ஜடாமுடி, காதில் தாடங்கம், கையில் மழு, மார்பில் ருத்ராட்சம், இடுப்பில் புலித்தோல் ஆடை இருக்கிறது. திருவாசியில் நாக வடிவில் சங்கன் குடை பிடித்தபடி இருக்கிறான். திருமாலுக்குரிய இடப்பாகத்தில் நவமணி கிரீடம், காதில் மாணிக்க குண்டலம், மார்பில் துளசிமணி மற்றும் லட்சுமி மாலை, கையில் சங்கு, இடுப்பில் பீதாம்பரம் இருக்கிறது. இவர் பக்கமுள்ள திருவாசியில் நாகவடிவில் பதுமன் குடை பிடிக்கிறான். இந்த சந்நிதியில் காலை பூஜையில் துளசிதீர்த்தம் தரப்படும். மற்ற நேரங்களில் விபூதி தருவர். பூஜையின் போது வில்வம், துளசி மாலைகளை அணிவிக்கிறார்கள்.சிவன் அபிஷேகப்பிரியர். திருமால் அலங்காரப்பிரியர். எனவே திருமாலுக்கு உகந்த வகையில் சங்கரநாராயணர் அலங்காரத்துடன் காட்சி தருகிறார். இவருக்கு அபிஷேகம் கிடையாது. இச்சந்நிதியில் ஸ்படிக லிங்கமாக காட்சி தரும் சந்திரமவுலீஸ்வரருக்கே அபிஷேகம் செய்யப்படும். சிவராத்திரி, ஏகாதசி நாட்களில் உற்சவருக்கு சிறப்பு பூஜை நடக்கும். ஆடித்தபசன்று மட்டும் அம்பாளுக்கு காட்சி தர இவர் வெளியே புறப்பாடாகிறார்.

