
அப்துலின் மகன் ஆஷிக்அலி நேரம் பார்க்காமல் எப்போதும் துாங்குவான். அவனை திருத்த விரும்பிய அப்துல், ''நான் சொல்வதைக் கேட்பாயா'' எனக் கேட்டார்.
''நிச்சயமாக'' என்றான்.
''தினமும் உன் வங்கிக் கணக்கில் 86,400 ரூபாய் வரவு வைக்கிறேன். அதை தினமும் செலவு செய்ய வேண்டும். செலவு செய்யாத பணம் அந்தந்த நாளே கணக்கிலிருந்து எடுக்கப்படும். பணத்தை வேறு யாருக்கும் மாற்ற முடியாது. அதை செலவளிக்க உனக்கு மட்டுமே உரிமை உண்டு. என் தொழிலை எதிர்காலத்தில் நீ தான் எடுத்துச் செய்ய வேண்டும் என்பதற்காக இந்த தேர்வை வைக்கிறேன்'' என்றார்.
''சரி... எனக்கு பிடித்தது எல்லாம் வாங்குவேன். பணத்தை வீணாக்க மாட்டேன். லாபம் தரும் விஷயத்தில் முதலீடு செய்வேன்'' என வாக்களித்தான் ஆஷிக்.
அப்துல் சிரித்துக் கொண்டே, ''உண்மையில் நீ பிறந்தது முதல் தினமும் 86,400 ரூபாயை செலவளித்துக் கொண்டுதான் இருக்கிறாய்'' என்றார்.
ஒன்றும் புரியாமல் விழித்தான் ஆஷிக்.
''இவ்வளவு நேரம் சொன்னது பணத்தை பற்றியல்ல. நேரத்தை பற்றித்தான். நாளைக்கு 24 மணி நேரம் அதாவது 86,400 வினாடிகள் வரவு வைக்கப்படுகிறது. ஆனால் கையில் கிடைத்த காலத்தை வீணாக்குபவன் துன்பத்திற்கு ஆளாவான்'' என்றார். நேரத்தின் அருமையை உணர்ந்த ஆஷிக் அதை சரிவர பயன்படுத்த முடிவு செய்தான்.