உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / திட்டமிட்டபடி நடக்குமா தயாரிப்பாளர் சங்க வேலைநிறுத்தம்?: மற்ற சங்கங்கள் போர்க்கொடி

திட்டமிட்டபடி நடக்குமா தயாரிப்பாளர் சங்க வேலைநிறுத்தம்?: மற்ற சங்கங்கள் போர்க்கொடி


சமீபத்தில் நடந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க பொது குழுவில் புது படங்களை 8 வாரங்கள் கழித்துதான் ஓடிடியில் ஒளிபரப்ப அனுமதிக்க வேண்டும் இல்லாவிட்டால் தியேட்டரில் அந்த படத்தை திரையிட மாட்டோம் என்று தியேட்டர் உரிமையாளர்கள் கூறுவது தவறு அப்படி நிர்பந்தம் செய்யக்கூடாது படத்தின் வியாபாரம் என்பது தயாரிப்பாளர் உரிமை என்ற வகையில் பேசப்பட்டது. அதேபோல், நடிகர்கள் வருவாய் பகிர்வு அடிப்படையில் படம் நடிக்க வேண்டும், இனி தயாரிப்பாளர்கள் வருவாய் பகிர்வு அடிப்படையில் தான் படம் தயாரிப்பார்கள் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை வலியுறுத்தி மே 2ம் தேதி அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாகவும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்தது. இதற்கு தென்னிந்திய நடிகர் சங்கம், தமிழ்நாடு விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தென்னிந்திய நடிகர் சங்கத்தின் மீது ஆதாரமற்ற குற்றம் சுமத்தி அதையே காரணமாகவும் முன்னிறுத்தி மே 2ல் வேலை நிறுத்தம் செய்ய தீர்மானம் நிறைவேற்றி உள்ளது பேரதிர்ச்சியையும் பெரும் வேதனையும் அளிக்கிறது. தயாரிப்பாளர்களின் பிரச்னைகளுக்கு சுமூக தீர்வு காண அமைப்பு ரீதியாக தாங்கள் வேண்டுகோள் விடுத்த போதெல்லாம் சந்திப்புகள் நிகழ்த்தியும், பிரச்னைகளுக்கு தீர்வு காணவும் உறுதுணையாக நாங்கள் இருந்து வரும் நிலையில், தன்னிச்சையாக இந்த வேலை நிறுத்த அறிவிப்பை வெளியிட்டது வருத்தத்திற்குரியது.

நடிகர்கள், கலைஞர்கள் அனைவரது வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் வேலை நிறுத்தத்தை இந்த சங்கம் ஆதரித்தது இல்லை, இனியும் ஆதரிக்காது. அதேபோல், வருவாய் பகிர்வு முறையில் பணியாற்றுவது தொடர்பாக தயாரிப்பாளர் சங்கம் சார்பில் இதுவரை கடிதமோ, மின்னஞ்சலோ அனுப்பப்படவில்லை; பேச்சு வார்த்தைக்கும் அழைக்கவில்லை. அத்துடன் தென்னிந்திய நடிகர் சங்கம் ஒருபோதும் தனது உறுப்பினர்களை வேலை நிறுத்தம் செய்யுமாறு அறிவுறுத்த எங்கள் சட்ட விதிகளில் இடமில்லை.

தங்கள் உறுப்பினர்களின் வாழ்வாதாரத்தையும் முதலீட்டையும் கூட பிரதானமாக பாதிக்கக்கூடிய இந்த தன்னிச்சையான வேலை நிறுத்த அறிவிப்பை திரும்பப் பெறுமாரும், முன்னரே இரு அமைப்புகளும் ஒப்புக்கொண்டபடி சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, பொருத்தமான ஒரு தேதியில் இரு அமைப்பின் பிரதிநிதிகளும் சந்தித்து அடுத்த கட்ட செயல்பாடுகள் குறித்து கலந்தாலோசனை செய்து தீர்மானிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

திருப்பூர் சுப்பிரமணியன்

முன்னணி விநியோகஸ்தரும் தியேட்டர் உரிமையாளர் சங்க நிர்வாகியுமான திருப்பூர் சுப்பிரமணியன் அளித்த பேட்டி: ''கடந்த 3 ஆண்டுகளில் தியேட்டருக்கு வருபவர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது. கிட்டத்தட்ட 50 சதவீதம் அளவுக்கு குறைந்துவிட்டது எனலாம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் எட்டு வாரங்களுக்கு முன்னதாக நாலு வாரத்திலேயே ஓடிடிக்கு ஒரு படத்தை திரையிட அனுமதித்தால் ரசிகர்கள் தியேட்டருக்கு போய் பார்க்க வேண்டாம் ஓடிடியில் பார்க்கலாம் என்ற மன நிலைக்கு வந்து விடுகிறார்கள். இதனால் தியேட்டர் வியாபாரம் பெரிதாக பாதிக்கப்படுகிறது.

எனவே தான் எட்டு வாரங்கள் கழித்து ஓடிடியில் ஒளிபரப்ப வேண்டும் என்று நாங்கள் கூறுகிறோம். அதை ஏற்க மாட்டோம் என தயாரிப்பாளர்கள் கூறியுள்ளனர். அது அவர்கள் உரிமை அதேபோல் எந்த படத்தை திரையிட வேண்டும் எதை திரையிடக்கூடாது என்பது எங்கள் உரிமை. எட்டு வாரங்களுக்கு பின் ஓடிடியில் ஒளிபரப்ப அனுமதிக்கப்படும் படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து வெளியிடுவோம். அதே சமயம் நடிகர்களுக்கு விகிதாச்சார சம்பளம் என்ற அணுகுமுறையை நாங்கள் ஏற்கிறோம். நான் கூட இப்பொழுது சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து விஷால் நடிக்கும் 'மகுடம்' படத்தை தயாரித்து வருகிறேன். அந்த படத்திலும் விஷாலுக்கு வியாபாரத்தில் பங்கு முறையில் சம்பளம் அளிக்கப்படுகிறது''. இவ்வாறு அவர் கூறினார்.
வேலைநிறுத்தம் நடக்குமா

இதுபோன்று தயாரிப்பாளர் சங்கத்தின் வேலைநிறுத்த போராட்டத்திற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், திட்டமிட்டபடி மே இரண்டாம் தேதி வேலை நிறுத்தம் நடக்குமா, அது ரத்து செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. சமரச பேச்சுக்கு தயாரிப்பாளர் சங்கம் வந்தால் வேலை நிறுத்தம் நடக்காது என்று கூறப்படுகிறது. அதை போல் நடப்பு தயாரிப்பாளர் சங்கம் இந்த வேலை நிறுத்தத்துக்கு ஆதரவளிக்கிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அவர்கள் வேலை நிறுத்தத்தை புறக்கணித்தால் அவர்கள் தயாரிக்கும் படங்களின் படப்பிடிப்பு அன்று நடக்கும் என்று தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !