லோகேஷ் ஓட்டு போட முடியாமல் போனது ஏன் : ஆர்.ஜே பாலாஜி தகவல்
சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் ஓட்டு சதவீதம் மிகப்பெரிய அளவில் அதிகரிக்கிறது. ஒரு பக்கம் இளைஞர்கள் ஆர்வமாக முன்வந்து தங்களது வாக்குகளை செலுத்தினார்கள் என்றால் இன்னொரு பக்கம் பிரபலங்கள் கூட தங்களது வாக்குகளை செலுத்துவதற்காக வெளிநாடுகளில் இருந்தும் வெளி மாநில படப்பிடிப்புகளில் இருந்தும் சென்னை வந்து தங்களது வாக்கை செலுத்தினார்கள். அந்த வகையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஓட்டளிப்பதற்காக கிளம்பியும் கூட அவரால் ஓட்டு போட முடியவில்லை. அதற்கான காரணத்தை 29 படத்தின் புரமோஷன் நிகழ்வில் கலந்து கொண்ட ஆர்ஜே பாலாஜி கூறினார்.
இது குறித்து ஆர் ஜே பாலாஜி கூறுகையில், “சென்னையில் ஓட்டு போட்டுவிட்டு மும்பை செல்வதற்காக நான் விமான நிலையம் சென்றேன். கோயம்பத்தூருக்கு சென்று ஓட்டு போடுவதற்காக லோகேஷ் வந்தார்.. இருவரும் பார்த்து ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்துக் கொண்டோம். நான் உள்ளே சென்ற பிறகு திரும்பி பார்த்தால் லோகேஷை நான்கு அதிகாரிகள் உள்ளே விடாமல் தடுத்து கொண்டிருந்தார். பின்னர் தான் தெரிந்தது அவர் விமான நிலையத்திற்கு குறித்த நேரத்தை கடந்து தாமதமாக வந்தார் என்பதால் அவரை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினார்கள் என்பது. அதனால் தான் அவரால் ஓட்டு செலுத்த முடியவில்லை. இந்த தகவலை இப்போது முதல் ஆளாக நான் தான் வெளியே சொல்கிறேன்” என்றார்.