மோகன்லாலிடம் கற்றுக்கொண்ட இரண்டு விஷயங்கள் : சிலாகிக்கும் எஸ்தர் அனில்
மலையாளத்தில் 2013ல் வெளியான திரிஷ்யம் மற்றும் 2021ல் வெளியான திரிஷ்யம் 2 என இரண்டு பாகங்களும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. இதில் மோகன்லாலின் இளைய மகளாக நடித்தவர் எஸ்தர் அனில். முதல் பாகத்தில் நடிக்கும் போது 11 வயது சிறுமியாக இருந்த அவர் இப்போது 24 வயது இளம் குமரியாக மாறி உள்ள நிலையில் விரைவில் வெளிவர இருக்கும் திரிஷ்யம் மூன்றாம் பாகத்திலும் நடித்துள்ளார். இந்தப் படங்களில் நடிக்கும்போது மோகன்லால் இடமிருந்து தான் கற்றுக் கொண்ட இரண்டு முக்கியமான விஷயங்கள் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் எஸ்தர் அனில்.
அதில், “ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு குழந்தைத்தனம் எப்போதும் இருக்கிறது. அது எப்போதுமே மறைந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதைத்தான் அவரை கவனித்த வகையில் மோகன்லாலிடம் இருந்து முதல் படிப்பினையாக எடுத்துக் கொண்டேன். அடுத்ததாக விஷயங்கள் நடக்கிறபடி நடக்கட்டும்.. எதையும் இறுக்கமாக பிடித்து வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்காதே என்பதுதான் அவரிடம் இருந்து நான் கற்றுக்கொண்ட இன்னொரு விஷயம்.
மோகன்லாலை பொருத்தவரை அவர் எப்போதுமே கவலையை வெளிப்படுத்த மாட்டார். இன்று தன்னை பற்றி என்ன எழுதியிருக்கிறார்கள், நாளை என்ன எழுதப் போகிறார்கள், இன்று நல்ல நாளாக இருந்ததா, இல்லை மோசமாக அமைந்ததா என்று எதையும் அவர் பொருட்படுத்த மாட்டார். இப்படி கவலைப்படும் நபராக நான் பார்த்தவரை அவர் தெரியவில்லை. அவரிடமிருந்து அந்த விஷயத்தையும் நான் எடுத்துக்கொண்டு பின்பற்றி வருகிறேன்” என்று கூறியுள்ளார்.