40 வருடம் கழித்து அமெரிக்காவில் மோகன்லாலை சந்தித்த ஆஷா ஜெயராம்
மலையாளத்தில் கடந்த 1986ல் வெளியான படம் 'ஒன்னு முதல் பூஜ்ஜியம் வரை'. ரகுநாத் பாவேரி என்பவர் இயக்கிய இந்த படத்தில் கதாநாயகியாக ஆஷா ஜெயராம் என்பவர் அறிமுகமானார். அது மட்டுமல்ல இந்த படத்தில் தான் தற்போது 'டாக்ஸிக்' படத்தை இயக்கியுள்ள கீத்து மோகன்தாஸ் குழந்தை நட்சத்திரமாக நான்கு வயதில் அறிமுகமானார். மேலும் இதில் மோகன்லால் டெலிபோனில் மட்டுமே பேசும் குரலாக படம் முழுவதும் வந்து கிளைமாக்ஸ் மட்டும் தனது முகத்தை காட்டும் கேமியோ ரோலில் நடித்திருந்தார்.
அந்தக் காட்சியில் மோகன்லாலுடன் ஆஷா ஜெயராம் நடித்திருந்தார். அதன் பிறகு ஒரு சில படங்களில் அவர் நடித்தாலும் பின்னர் திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். இந்த நிலையில் தற்போது அமெரிக்காவில் கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வரும் மோகன்லாலை அந்த நிகழ்ச்சியில் நேரில் சந்தித்துள்ளார் ஆஷா ஜெயராம். இதுகுறித்த புகைப்படங்களை பகிர்ந்து கொண்டுள்ள ஆஷா ஜெயராம், “40 வருடங்களுக்கு பிறகு நான் மோகன்லாலை சந்திக்கிறேன். இது நிஜம் தானா என்று என்னால் நம்ப முடியவில்லை” என கூறியுள்ளார்.