ஜெயலலிதா கொடுத்த செக்கை வாங்க மறுத்த ஆர்பி சவுத்ரி : நினைவுகளை பகிர்ந்த இயக்குனர் பாரதி கண்ணன்
தயாரிப்பாளர் ஆர்பி சவுத்ரி சாலை விபத்தில் மரணம் அடைந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரை சந்தித்து பேசியவர் இயக்குனர் பாரதி கண்ணன். அவரோடு கடைசியாக போட்டோ எடுத்த சினிமா பிரபலமும் அவர் தான். அந்த சந்திப்பில் என்ன நடந்தது என்றும், ஆர்.பி சவுத்ரி குறித்தும் பாரதி கண்ணன் கூறியதாவது :
‛கண்ணாத்தாள்' என்ற படம் எடுக்க என்னை நம்பி அப்போதே ஒரு கோடிக்கு மேல் பணம் கொடுத்தவர் ஆர்பி சவுத்ரி. பின்னர் திருநெல்வேலி படத்துக்கு எனக்கு உதவினார். எனக்கும் அவருக்கும் பல ஆண்டுகளாக நட்பு. சமீபத்தில் அவரை சந்தித்து பேசவில்லை. ஒரு நாள் இரவில் அவரை சந்திக்க வேண்டும் என்று திடீரென என் உள்ளுணர்வு சொல்லியது. அதை தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு அவரை ஆபீஸில் சந்தித்து பேசினேன். பல சினிமா நினைவுகளை பேசினோம் .
அப்போது எனக்கு வயதாகிவிட்டது கம்பெனிக்கு கதை கேட்க ஆட்கள் வேண்டும். நீ உதவி செய் என்றார். கதை கேட்க சம்பளமும் போட்டுக் கொடுக்கிறேன் என்றார். நானோ சம்பளம் வேண்டாம் உங்களுக்காக கதை கேட்கிறேன் என்றேன். பல்வேறு விஷயங்களை பேசிவிட்டு அவருடன் போட்டோ எடுத்து விட்டு கிளம்பும்போது ராஜஸ்தான் செல்கிறேன். அங்கே சென்று விட்டு வந்தவுடன் சந்திப்போம் என்றார். ஆனால் ராஜஸ்தானில் நடந்த விபத்தில் அவர் காலமானது வருத்தத்துக்குரியது.
ஆர்பி சவுத்ரியின் பெருமைகள் பற்றி அவரின் தனிப்பட்ட குணங்கள் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம். ஒரு படத்தை அவர் தயாரித்தார். அந்த படம் பெரிய ஹிட், அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா இந்த படத்தை பார்க்க ஆசைப்பட அந்த படத்தின் காப்பியை அனுப்பி வைத்தார். ஆனால் ஏதோ தவறுதலாக அந்த படத்தை ஜெயா டிவியில் போட்டு விட்டார்கள். இதனால் படத்தை வெளியிட்ட விநியோகஸ்தர்கள் வருத்தப்பட்டார்கள். சவுத்ரிக்கு பெரிய இழப்பு. அதை கேள்விப்பட்ட அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, சவுத்ரியை அழைத்து ஒரு செக் கொடுத்து உங்களுக்கான இழப்பை இதில் எழுதிக் கொள்ளுங்கள் என்றார். ஆனால் சவுத்ரி அந்த செக்கை வாங்க மறுத்துவிட்டார். ஓரளவு படத்தின் வசூல் வந்து விட்டது. விநியோகஸ்தர்களிடம் நான் பேசிக் கொள்கிறேன் என்று பெருந்தன்மையுடன் வந்தார் அந்த குணம் பெரியது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.