பிளாஷ்பேக் : வீட்டை விற்று விநியோகஸ்தர்களுக்கு நஷ்டஈடு கொடுத்த நடிகர்
'பாபா' படம் தோல்வி அடைந்து விநியோகஸ்தர்கள் பெரும் நஷ்டத்தை அடைந்தபோது ரஜினி விநியோகஸ்தர்களுக்கு நஷ்டஈடு கொடுத்தார். டி.ராஜேந்தரும் இப்படி நஷ்டஈடு கொடுத்தார். இப்படியான ஒரு சம்பவம் 1959ம் ஆண்டே நடந்துள்ளது.
எழுத்தாளர் தி.ஜானகிராமனின் பெரிய ரசிகர் அன்றைக்கிருந்த குணசித்ர நடிகர் சகஸ்ரநாமம். அவரின் 'நாலு வேலி நிலம்' என்ற நாவலை திரைப்படமாக்க வேண்டும் என்பது அவரது நீண்ட நாள் கனவு. ஆனால் தயாரிப்பாளர்கள் யாரும் முன்வரவில்லை. இதனால் தானே தயாரிப்பது என்று முடிவு செய்தார். முக்தா சீனிவாசனை இயக்க சொல்லி தானே கதையின் நாயகனாக நடித்தார்.
அவருடன் பண்டரிபாய், எஸ்.வி.சுப்பையா, மைனாவதி, குலதெய்வம் ராஜகோபால், தேவிகா, முத்துராமன் உள்ளிட்ட பலர் நடித்தனர். படம் தயாரானதும் படத்தை பார்த்த விநியோகஸ்தர்கள் வாங்க முன்வரவில்லை. பின்பு ஒரு வழியாக குறைந்த விலைக்கு படத்தை விற்றார். ஆனாலும் படம் தோல்வி அடைந்தது. விநியோகஸ்தர்கள் நஷ்டம் அடைந்தனர். இதனால் தனது வீட்டை விற்று அந்த பணத்தை கொண்டு விநியோகஸ்தர்களுக்கு நஷ்டஈடு கொடுத்தார். பண்டரிபாய் மற்றும் மைனாவதிக்கு இருந்த சம்பள பாக்கியையும் கொடுத்தார்.