ஏமாற்றம் தந்த ஏப்ரல் மாதம்
2026ம் ஆண்டின் நான்கு மாதங்கள் முடிவடைந்து ஐந்தாவது மாதத்தில் போய்க் கொண்டிருக்கிறோம். தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடத்திலும் ஏப்ரல் மாதம் என்பது சிறப்பான ஒரு மாதமாக அமையும்.
பொங்கல், தீபாவளி பண்டிகை நாட்களில் வெளியாகும் படங்களைப் போலவே தமிழ்ப் புத்தாண்டிற்கும் வெளியாகும் படங்கள் முக்கியத்துவம் பெறும். அதன்பின் ஆரம்பமாகும் கோடை விடுமுறைதான் அதற்குக் காரணம்.
ஆனால், இந்த வருடம் அதன் முக்கியத்துவத்தை தமிழ்ப் புத்தாண்டு இழந்து, கோடை விடுமுறையிலும் தொடர வைத்துவிடுமோ என்ற ஒரு அச்சம் ஏற்பட்டுவிட்டது.
மார்ச் மாதம் வரையில் வெளியான 67 படங்களில் “தலைவர் தம்பி தலைமையில், வித் லவ், தாய் கிழவி, யூத்' ஆகிய நான்கு படங்கள் மட்டுமே குறிப்பிடும்படியான லாபத்தைக் கொடுத்த படங்களாக இருந்தன. அந்த நிலையை ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் ஓரிரு முக்கிய படங்கள் மாற்றும் என்ற நம்பிக்கை இருந்தது.
ஏப்ரல் மாதத்தில் வெளியான 21 படங்களில் ஒரு படம் கூட வெற்றிப் படமாக அமையாமல் ஏமாற்றத்தைத் தந்த மாதமாகவே முடிந்து போனது.
ஏப்ரல் 3ம் தேதி, “கார்மேனி செல்வம், காளிதாஸ் 2, லீடர், மரகத மாலை, நீளிரா” ஆகிய படங்கள் வெளிவந்தன. இந்தப் படங்களில் 'காளிதாஸ் 2' படம் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அதன் முதல் பாகம் வெற்றிகரமான படமாக அமைந்ததால் வந்த எதிர்பார்ப்பு அது. ஆனால், இரண்டாம் பாகத்தை முதல் பாகம் அளவிற்கு விறுவிறுப்பாக சொல்லாமல் கோட்டை விட்டார்கள். லெஜண்ட் சரவணன் நடித்த 'லீடர்' படம் விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்றாலும் வசூல் சுமாராகவே அமைந்தது.
ஏப்ரல் 10ம் தேதி, 'கெஸ்ட், லவ் இன்சூரன்ஸ் கம்பெனி, மனிதன் தெய்வமாகலாம், தக்ஸிலா, டிஎன் 2026” ஆகிய படங்கள் வெளிவந்தன. பிரதீப் ரங்கநாதனின் முந்தைய படங்களின் வெற்றி காரணமாக 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' எதிர்பார்க்கப்பட்ட படமாக இருந்தது. ஆனால், அந்த எதிர்பார்ப்பு பொய்யாகிப் போனது. பிரதீப்பின் முந்தைய படங்கள் 100 கோடி வசூலைக் கடந்திருக்க, இந்தப் படம் 60 கோடி வசூலை மட்டுமே கடந்தது. 'டிஎன் 2026' படம் தற்போதைய அரசியலை கிண்டலடித்த படமாக இருந்தது. டிரைலர் பேசப்பட்ட அளவிற்கு படம் பேசப்படவில்லை.
ஏப்ரல் 17ம் தேதி “மிஸ்டர் எக்ஸ், புரவியாட்டம், ரூம் பாய்” ஆகிய படங்கள் வெளிவந்தன. இவற்றில் 'மிஸ்டர் எக்ஸ்' படத்தில் ஆர்யா, கவுதம் ராம் கார்த்திக், சரத்குமார், மஞ்சு வாரியர் என மல்டி ஸ்டார்கள் இருந்ததால் எதிர்பார்க்கப்பட்டது. அந்த எதிர்பார்ப்பு முழுமையான ஏமாற்றத்தில்தான் முடிந்தது. ஆர்யா மீண்டும் அடுத்த வெற்றிக்குக் காத்திருக்க வேண்டியதாகிவிட்டது.
ஏப்ரல் 24ம் தேதி, “பேட்டில், பிரேக்பாஸ்ட், கமாண்டாவின் லவ் ஸ்டோரி, பாவக் கூத்து, தீயோர் கூடம்” ஆகிய படங்கள் வெளிவந்தன. இந்த வருடத்தின் படங்களின் எண்ணிக்கையைக் கூட்டிய படங்களாக இவை அமைந்தன.
ஏப்ரல் 30ம் தேதி தனுஷ் நடித்த 'கர' படம் வெளியானது. 2026ம் வருடத்தின் முதல் பெரிய வெற்றியை இந்தப் படம் பெறும் என்ற எதிர்பார்ப்பை விட நம்பிக்கை அதிகம் இருந்தது. பட வெளியீட்டிற்கு முன்பாக கொடுக்கப்பட்ட பில்டப் அந்த அளவிற்கு இருந்ததே அதற்குக் காரணம். ஆனால், சுமாரான வரவேற்பையும், வசூலையும் பெற்று ஏமாற்றியது.
ஏப்ரல் மாத ஆரம்பத்தில் நடைபெற்ற முழு ஆண்டுத் தேர்வுகள், மாதக் கடைசியில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல், ஐபிஎல் போட்டிகள் என இருந்தாலும் ஒரு சில படங்களுக்கு ஓரிரு காட்சிகளுக்கான வரவேற்பு தான் இருந்தது. ஓரிரு நாட்கள் கூட அந்த வரவேற்பு இல்லை என்பது வருத்தத்திற்குரிய விஷயம்.
மே மாதத்தின் துவக்கமும் சிறப்பாக அமையாமல் போய்க் கொண்டிருக்கிறது. மே 14ல் வெளியாகும் 'கருப்பு' 2026ன் முதல் பெரிய வெற்றியைத் தருமா என சில நாட்கள் காத்திருப்போம்.
2026 - ஏப்ரல் மாதம் வெளியான படங்கள்…
ஏப்ரல் 3
கார்மேனி செல்வம், காளிதாஸ் 2, லீடர், மரகத மாலை, நீளிரா
ஏப்ரல் 10
மிஸ்டர் எக்ஸ், புரவியாட்டம், ரூம் பாய்
ஏப்ரல் 17
மிஸ்டர் எக்ஸ், புரவியாட்டம், ரூம் பாய்
ஏப்ரல் 24
பேட்டில், பிரேக்பாஸ்ட், கமாண்டாவின் லவ் ஸ்டோரி, பாவக் கூத்து, தீயோர் கூடம்
ஏப்ரல் 30
கர